Published : 12 Jun 2018 03:34 PM
Last Updated : 12 Jun 2018 03:34 PM
கார்கில் போரில் மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் விக்ரம் பத்ரா குறித்த வாழ்க்கை வரலாறு பாலிவுட்டில் திரைப்படமாக உருவாக உள்ளது.
1999 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் துணிச்சலாகப் போரிட்டு தங்கள் உயிரை இழந்த இந்திய வீரர்களில் ஒருவர்தான் 24 வயதான கேப்டன் விக்ரம் பத்ரா. கார்கில் போரில் மரணம் அடைந்த விக்ரம் பத்ராவுக்கு பரம் வீர் சக்ரா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.
தற்போது விக்ரம் பத்ராவின் வாழ்க்கைவரலாறு தற்போது திரைப்படமாக உருவாக உள்ளது. இப்படத்தில் ’ஏக் வில்லன்’ ’இத்ஃபாக்‘ திரைப்படங்களில் நடித்து பிரபலமான சித்தார்த் மல்ஹோத்ரா விக்ரம் பத்ராவாக நடிக்க இருக்கிறார். பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் விஷ்ணுவர்தன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை தர்மா புரொடக்ஷன் தயாரிக்கிறது.
இப்படத்தில் நடிப்பது குறித்து நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா, “விக்ரம் பாத்ராவின் வாழ்க்கைக் கதை நிச்சயம் உங்களை ஊக்குவிக்கும் மற்றும் உங்கள் முகத்தில் புன்னகையைக் கொண்டுவரும். நான் இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன்” என்று கூறியுள்ளார்.
இப்படம் குறித்து விக்ரம் பத்ராவின் சகோதரர் விஷால் பத்ரா கூறும்போது, "இந்தப் படம் குறித்து எனக்கு எந்த பயமும் இல்லை. நாங்கள் இந்த திரைப்ப்டத்துக்கு பிற நடிகர்களையும் தேடினோம். ஆனால் 24 வயது இளைஞனான சிறப்பான நடிப்பை திரையில் வெளிப்படுத்த வேண்டும். அந்த காரணத்துக்காக சித்தார்த்தை தேர்ந்தெடுத்தோம். சித்தார்த் ஒரு நடிகர் ஆனால் ஒரு தைரியமிக்க ராணுவ வீரராக களத்தில் இருப்பது வேறு. அவர் இத்திரைப்படத்துக்கான நியாயத்தை செய்வார் என்று நம்புகிறேன். இளம் நடிகர் மற்றும் பெரிய அளவிலான ரசிகர்களை கொண்டுள்ள சித்தார்த் இந்த கதாப்பாத்திரத்துக்கு ஏற்றவர். அதுமட்டுமல்லாது இந்த வாய்ப்புதான் நாட்டின் மீதான விக்ரமின் காதலை காட்டுவதற்கான தருணம்" என்றார்
இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT