Published : 27 Aug 2024 07:06 AM
Last Updated : 27 Aug 2024 07:06 AM
இந்தியாவின் மிகவும் மோசமான, மோசடி கில்லாடி என்றழைக்கப்படுபவர், தானி ராம் மிட்டல். ஹரியானா மாநிலம் ரோடக் பகுதியைச் சேர்ந்த இவர், 1960-ம் ஆண்டு, அங்குள்ள நீதிமன்றத்தில் உதவியாளராக பணிக்குச் சேர்ந்தார். நீதிபதி விடுமுறையில் சென்ற போது, 2 மாதங்கள் நீதிபதியாக நடித்து ஏராளமான குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கியவர் இவர்.
டில்லி, ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்களைத் திருடி உள்ளார். பகலில் திருடுவது இவர் ஸ்டைல். போலி ஆவணங்கள் மூலம் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். தனது வழக்குகளில் தானே வாதாடி இருக்கிறார். இப்படிப்பட்ட ‘புகழை’ கொண்ட தானி ராம் மிட்டல், கடந்த ஏப்ரல் மாதம் காலமானார்.
இவரது வாழ்க்கைக் கதையை ‘மனிராம்’ (MoneyRam) என்ற பெயரில் பிரீத்தி அகர்வால், சேதன் உன்னியல் புத்தகமாக எழுதியுள்ளனர். இதன் அடிப்படையில் தானிராம் மிட்டலின் வாழ்க்கைக் கதை சினிமாவாகிறது.
இதை, மோகன்லால் நடித்த கூதாரா, துல்கர் சல்மான் நடித்த குரூப் படங்களை இயக்கிய ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்குகிறார். இந்தியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு உட்பட மற்ற மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT