Published : 23 Jul 2024 06:33 PM
Last Updated : 23 Jul 2024 06:33 PM

“லாபட்டா லேடீஸ் படம் வசூல் ரீதியில் வெற்றி பெறவில்லை” - இயக்குநர் கிரண் ராவ் உருக்கம்

மும்பை: இயக்குநர் கிரண் ராவ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற படம் ‘லாபட்டா லேடீஸ்’. குறிப்பாக ஓடிடி வெளியீட்டுக்குப் பின்னர்தான் படம் பலதரப்பு ரசிகர்ளின் பாராட்டைப் பெற்றது. இந்நிலையில், திரையரங்க வெளியீட்டில் படம் பெரிய அளவில் வசூலை குவிக்கவில்லை என இயக்குநர் கிரண் ராவ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “நான் இயக்கிய இரண்டு படங்களும் பாக்ஸ் ஆஃபிஸில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. 2011-ம் ஆண்டு வெளியான எனது ‘தோபி கட்’ (dhobi ghat) திரைப்படம் அந்த நேரத்தில் குறிப்பிட்ட வசூலை ஈட்டியது. 10, 15 வருடங்கள் கழித்து வெளியான எனது ‘லாபட்டா லேடீஸ்’ படமும் பாக்ஸ் ஆஃபிஸில் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. சொல்லப்போனால் ‘தோபி கட்’ படத்தை விட ’லாபட்டா லேடீஸ்’ வசூல் குறைவுதான்.

எனவே, ஏதேனும் ஒரு வகையில் நான் தோல்வியை உணர்கிறேன். பாக்ஸ் ஆஃபிஸின் கணக்குப்படி பார்த்தால் நாங்கள் வெற்றி பெறவில்லை. நாங்கள் நூறு கோடிகளை கொட்டி படம் எடுக்கவில்லை. ரூ.30, ரூ.40, ரூ.50 கோடியில் கூட நாங்கள் படம் எடுக்கவில்லை. சிறிய பட்ஜெட்டில் தான் படம் எடுத்தோம். பாக்ஸ் ஆஃபிஸில் படம் வெற்றி பெறாததற்கான பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன்.

’தோபி கட்’ படம் வெளியான போதும் இப்படியான ஓர் உணர்வை தான் எதிர்கொண்டேன். காரணம் எங்களுக்கென்று தனி ஓடிடி தளமோ, அல்லது வேறு மாற்று தளங்களோ இல்லை. அதனால் பெரும்பான்மையான பரந்த பார்வையாளர்களை ஈர்க்க முடியவில்லை. சமகாலத்துக்கு ஏற்ற படமாகவோ, திரையரங்க வெளியீட்டுக்கு தகுந்த திரைப்படமாக இது இல்லை என்ற உணர்வு சில நேரம் எனக்கு தோன்றுவது உண்டு” என்றார்.

மேலும், “தோல்வி என்று நான் சொல்வது எனக்கு எல்லா நாளும் தோல்வியாகவே இருந்துள்ளது. இந்த 10 வருடங்களாக நான் ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டிருக்கிறேன். தொடர்ந்து எல்லா நாளும் பிசியாக இருக்கிறேன். என் முதல் படம் முடிந்த பின்பு, இரண்டாவது படம் விரைவில் வெளியாகும் என எண்ணிக்கொண்டிருந்தேன்.

ஆனால், அந்த விரைவில் என்பதை மட்டும் நான் அடையவே இல்லை. 10 ஆண்டுகளாக நான் கடுமையான போராட்டங்களை சந்தித்துள்ளேன். படைப்பாளிகளில் பெரும்பாலானோர் விரைவில் எதையாவது சாதிக்காதபோது, அல்லது சாதிக்காமலே இருக்கும்போது இதுபோன்ற தோல்வி உணர்வை அதிகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என நான் நினைக்கிறேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x