Published : 18 Apr 2024 03:24 PM
Last Updated : 18 Apr 2024 03:24 PM
மும்பை: “ஒரு படத்துக்கு ஹீரோ வாங்கும் சம்பளத்தை, 15 படங்களில் நடித்தால் மட்டுமே நான் பெற முடியும். ஆனால், இப்போது மாற்றம் நிகழ்ந்துள்ளது” என நடிகை ரவீனா டாண்டன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “நான் 90-களில் நடிக்க வந்தேன். அந்தக் காலகட்டத்தில் நடிகைகளின் சம்பளம் மிகக் குறைவு. நடிகர்களை ஒப்பிடும்போது வேறுபாடு அதிகம். ஒரு படத்துக்கு ஹீரோ வாங்கும் சம்பளத்தை, 15 படங்களில் நடித்தால் மட்டுமே நான் பெற முடியும். ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள்தான் கிடைக்கும். பாத்திரங்களைத் தேர்வு செய்யும் சுதந்திரம் இல்லை. திட்டமிடலும் இல்லாததால் எங்களை நிலை நிறுத்திக்கொள்ள அதிக காலம் தேவைப்பட்டது.
இப்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் வந்திருக்கின்றன. அவர்கள் தொழில்முறையாகத் திட்டமிட்டுப் படங்களை உருவாக்குகிறார்கள். நடிகைகளும் இப்போது நல்ல நிலையில் உள்ளனர். அவர்கள் நடிப்பு வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்து வருகின்றன. இப்போது காலம் மாறிவிட்டது.
‘ஓம் சாந்தி ஓம்’ படத்தில் அறிமுகமான தீபிகா படுகோனுக்கு 5, 6 படங்களுக்குப் பிறகு ‘பாஜிராவ் மஸ்தானி’ போன்ற சிறந்த படங்கள் கிடைக்கிறது. எங்கள் காலத்தில், சுமார் 20 படங்களுக்குப் பிறகுதான் அத்தகைய கதாபாத்திர வாய்ப்பு கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
90-களில் அறிமுகமான பிரபல இந்தி நடிகை ரவீணா டாண்டன். இவர் தமிழில் அர்ஜுனுடன் ‘சாது’, கமலுடன் ‘ஆளவந்தான்’ படங்களில் நடித்துள்ளார். ‘கேஜிஎஃப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, இந்தியில் நடித்து புகழ்பெற்ற இவர் கடைசியாக ‘பாட்னா சுக்லா’ (Patna Shuklla) இந்திப் படத்தில் நடித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT