Published : 20 Aug 2014 03:41 PM
Last Updated : 20 Aug 2014 03:41 PM

நான் ஒரு விக்ரம் ரசிகன்: அபிஷேக் பச்சன் புகழ் மழை

நடிகர் விக்ரமின் தீவிர ரசிகன் நான் என்று இந்தி திரையுலகின் முன்னணி நடிகர் அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.

சமீபத்தில் சென்னை வந்திருந்த அபிஷேக் பச்சன், நடிகர் விக்ரம் பற்றியும், தான் படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பது பற்றியும் கூறியுள்ளார்.

"விக்ரம் நடித்த 'சாமி' படத்தை சத்யம் தியேட்டரில் முதல் நாள் முதல் ஷோ பார்த்தேன். 'தூள்' படத்தை 17 முறை பார்த்திருக்கிறேன். விக்ரமுடன் நடிப்பது ஒரு சுவாரஸ்யமான அனுபவம்.

இந்தியில் 'ராவண்' படத்தில் நான் ராவண் கதாபாத்திரத்தில் (கதை நாயகன்) நடிக்க, விக்ரம் ராம் கதாபாத்திரத்திலும் நடித்தார்.

தமிழில் ராவணன் படத்தில் நான் ராம் பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என மணிரத்னம் கேட்டுக் கொண்டார். ஆனால், நான் அதனை மறுத்து, எனது நிலமையை மணி சாரிடம் விளக்கினேன் (பின்னர் பிருத்விராஜ் அந்த பாத்திரத்தில் நடித்தார்).

ஐஸ்வர்யா ராய் ’இருவர்’ படத்தின் மூலம்தான் அறிமுகம் ஆனார். அதனால் அவருக்கு தமிழில் நடிப்பது எளிதாக உள்ளது.

நான் சிறுவனாக இருந்தபோது, சாப்பிடும் நேரத்தில் சினிமாவைப் பற்றி பேச மாட்டார் என் அப்பா. ஆனால், இப்போது அப்படி இல்லை. எங்கள் வீட்டில் நான்கு நடிகர்கள் இருக்கின்றோம். எனவே நாங்கள் பார்த்த / நடிக்கும் படங்களைப் பற்றி சாப்பிடும்போது பேசுகிறோம்.

ஆராத்தியாவோடு (மகள்) இருக்கும் பொழுது அவளிடம் மட்டுமே கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

நான் நடிக்கும் கதாபாத்திரங்களை கவனத்துடன் தேர்ந்தெடுக்கிறேன். ஆபாசமான காட்சிகளை முடிந்தவரை தவிர்க்கிறேன். பிற்காலத்தில் ஆராத்தியா 'என் தந்தை ஏன் இந்த மாதிரியான படங்களில் நடித்திருக்கிறார்’ என நினைத்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்."

அபிஷேக் பச்சன் தற்பொழுது ஷாருக்கானின் ‘ஹாப்பி நியூ இயர்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அபிஷேக் தமிழ் படங்களில் நடிப்பதற்கு இப்போது மிகுந்த ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். " என்னால் இப்போது ‘வணக்கம்' என்ற வார்த்தையைத் தாண்டி பல வார்தைகள் தமிழில் பேச முடியும். ஏனென்றால் நான் இங்கே பலமுறை வந்து போய்க்கொண்டு இருக்கிறேன். அதுமட்டுமில்லை என்னால் தூள் படத்தின் ‘அருவா மீசை’ பாடலை முழுதாக பாட முடியும்." என்று இப்போது இருக்கும் மீசையை முறுக்கினார் அபிஷேக் பச்சன்.

'விக்ரம், அபிஷேக் இணைந்து நடிக்கும்' என போஸ்டர் சென்னையில் ஒட்டப்படுகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x