Published : 16 Nov 2023 04:25 PM
Last Updated : 16 Nov 2023 04:25 PM

“தவறுதலாக நடந்துவிட்டது” - ரசிகரை தாக்கிய சம்பவத்துக்கு மன்னிப்புக் கோரிய நானா படேகர்

உத்தரபிரதேசம்: “நான் யாரிடமும் புகைப்படங்களை எடுக்க வேண்டாம் என கூறியதில்லை. அப்படி சொல்லவும் மாட்டேன். இது தவறுதலாக நடந்த விஷயம்” என செல்ஃபி எடுக்க வந்த ரசிகரை தாக்கியது குறித்து நடிகர் நானா படேகர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் ரசிகர் ஒருவரை அடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது நான் நடிக்கும் படத்தில் வரும் ஒரு காட்சி. நாங்கள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தோம். முதல் ஒத்திகை காட்சி சரியாக வரவில்லை என்பதால் இரண்டாவது ஒத்திகைக் காட்சிக்கு தயாரானோம். அப்போது எதிர்பாராத விதமாக நீங்கள் வீடியோவில் பார்த்த அந்த இளைஞர் உள்ளே வந்துவிட்டார். நான் ரிகர்செல் என நினைத்து சம்பந்தப்பட்ட காட்சியின்படியே நான் அந்த இளைஞரை அடித்து அனுப்பினேன்.

அவர் படக்குழுவைச் சேர்ந்தவர் என்று எண்ணி தான் அப்படிச் செய்தேன். மற்றபடி அவர் யார் என்றே எனக்குத் தெரியாது. ஒத்திகை முடிந்த பின்தான், அவர் எங்கள் படக்குழுவைச் சேர்ந்தவர் இல்லை என்பது எனக்குத் தெரியவந்தது. உடனே நான், அவரை அழைக்க முயன்றபோது, அவர் அங்கிருந்து ஓடிவிட்டார். வீடியோ எடுத்தது அவரது நண்பராக இருக்கலாம் என நினைக்கிறேன். நான் யாரிடமும் புகைப்படங்களை எடுக்க வேண்டாம் என கூறியதில்லை. அப்படி சொல்லவும் மாட்டேன். இது தவறுதலாக நடந்த விஷயம். தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். நான் இனி இப்படி செய்யமாட்டேன்” என உருக்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

பின்னணி: பாலிவுட் நடிகர் நானா படேகர் தன்னிடம் செல்ஃபி எடுக்க வந்தவரை தலையில் அடித்து விரட்டும் வீடியோ ஒன்று நேற்று (நவ.15) சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் நானா படேகர் ‘திமிரு’ பிடித்தவர் என்றெல்லாம் விமர்சித்து வந்தனர். நானா படேகர் நடிக்கும் புதிய படமான ‘Journey’ படத்தின் படப்பிடிப்பு உத்தரபிரதேசம் வாரணாசியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது தான் மேற்கண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தப்படத்தை அனில் ஷர்மா இயக்குகிறார்.

இந்த சம்பவம் குறித்து நேற்று விளக்கமளித்த இயக்குநர் அனில் ஷர்மா, “நானா படேகர் யாரையும் அடிக்கவில்லை. மாறாக அது என்னுடைய படத்தில் வரும் ஒரு காட்சி. உத்தரப் பிரதேசம் வாரணாசியில் உள்ள பனராஸின் மக்கள் கூட்டம் நிறைந்த சாலையில் நாங்கள் அதை படமாக்கிக் கொண்டிருந்தோம். ஸ்கிரிப்டின்படி, நானா படேகர் அந்த பையனை அடிக்க வேண்டும். அப்படி ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும்போது யாரோ இதனை செல்ஃபோனில் வீடியோ எடுத்து பரப்பியுள்ளனர்.

இது சமூக ஊடகங்களில் நானா படேகர் மீது எதிர்மறையான பிம்பத்தை உருவாக்கி வருகிறது. அவர் முரட்டுத்தனமான நபராக சித்தரிக்கப்படுகிறார். இது முற்றிலும் தவறானது. இந்த வீடியோவின் உண்மையை ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x