Published : 26 Sep 2023 03:13 PM
Last Updated : 26 Sep 2023 03:13 PM
புதுடெல்லி: இந்தியத் திரைத் துறையில் மிக உயர்ந்ததாகப் போற்றப்படும் ‘தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது’க்கு பாலிவுட் மூத்த நடிகையும், திரை ஆளுமையுமான வஹீதா ரஹ்மான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் செவ்வாய்க்கிழமை தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ள நீண்ட பதிவொன்றில், “இந்திய சினிமாவுக்காக வஹீதா ரஹ்மான் ஆற்றிய அளப்பரிய பங்களிப்புக்காக இந்த ஆண்டுக்கான மதிப்பு மிக்க பெருமைக்குரிய தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது அவருக்கு வழங்கப்படுகிறது என்பதை தெரிவிப்பதில் மகிவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
இந்தி படங்களில் நடித்த வஹீதா ஜி, விமர்சன ரீதியாகவும் பெரும் பாராட்டைப் பெற்றவர். அவர் நடித்த படங்களில் பியாசா, காகஸ் கி பூல், செளதாவி கா சந்த், பிவி அவுர் குலாம், கைடு, காமோஷி போன்ற பல குறிப்பிடத்தகுந்தவை. சுமார் 5 தசாப்தங்களாக நீளும் தனது கலை வாழ்வை, தேர்ந்தெடுத்து நடித்த தனது கதாபாத்திரங்கள் மூலம் மிகவும் நேர்த்தியாக அவர் அமைத்துக்கொண்டார்.
இந்த நேர்த்தி ‘ரேஷ்மா அண்ட் ஷீரா’ படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்துக்கு தேசிய விருதினைப் பெற்றுத் தந்தது. பத்மஸ்ரீ, பத்ம பூஷண் வஹீதா ஜி தனது அர்ப்பணிப்பு, கடின உழைப்பின் மூலம் தான் சார்ந்திருக்கும் தொழிலில் சிறந்த உயரத்தினை அடையலாம் என்று இந்திய பெண் சக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.
நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள இந்த வேளையில், வஹீதா இந்த உயரிய விருத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, இந்திய சினிமாவின் ஒரு முன்னணி பெண்மணி, சினிமாவுக்கு பிறகான தனது வாழ்வை பொதுத் தொண்டுக்கு அர்ப்பணித்த ஒருவருக்கு செய்யும் பொருத்தமான மரியாதையாக இருக்கும். நமது திரைப்பட வரலாற்றின் உள்ளார்ந்த செழுமையாக இருக்கும் அவரது பங்களிப்பினை வணங்கி, அவரை நான் வாழ்த்துகிறேன்" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT