Published : 06 Sep 2023 04:07 PM
Last Updated : 06 Sep 2023 04:07 PM
மும்பை: ‘ஜவான்’ படத்தில் ஹீரோ கதாபாத்திரமா அல்லது வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறீர்களா? என கேட்கப்பட்ட கேள்விக்கு, நடிகர் ஷாருக்கான் பதிலளித்துள்ளார். படக்குழு தரப்பிலிருந்து ரசிகர்களிடையே கேட்கப்பட்ட 7 கேள்விகளை தேர்வு செய்து, அதற்கு ஷாருக்கானும், விஜய் சேதுபதியும் பதிலளிக்கும் வகையில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்தக் கேள்வி - பதில் இங்கே:
ஷாருக்கானுக்கான கேள்வி: ‘அட்லீயும், நீங்களும் நீண்ட நாட்களாக இணைந்து பணியாற்ற விரும்புவது உண்மையா?’ என்ற கேள்விக்கு பதிலளித்த ஷாருக்கான், “பிகில் படத்தின் தயாரிப்பின்போது நான் அட்லீயை சந்தித்தேன். அவர் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் போட்டிகளுக்கு சென்றிருந்தார். இதற்கு முன் அட்லீ என்னிடம் ஜவான் பற்றிய மூலக்கதையை சொன்னார். அத்துடன், ‘ஐந்து பெண்களுடன் நீங்கள் நடிக்கிறீர்கள்’ என்றார். அப்படித்தான் ஜவான் தொடங்கியது.”
விஜய் சேதுபதிக்கான கேள்வி: ‘ஜவான் படத்தில் உங்களுக்கு வில்லன் கதாபாத்திரம் எப்படி கிடைத்தது? படத்தில் நீங்கள் உண்மையான வில்லனா அல்லது ஷாருக்கானா?’ என கேட்கப்பட்டது. இதற்கு விஜய் சேதுபதி கூறுகையில், “ஷாருக்கிடம், 'சார் நான் உங்கள் படத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பினேன்' என்றேன். அதற்கு ஷாருக், 'கடந்த சில வருடங்களாக உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தோம்' என்றார். அப்படித்தான் இந்தப் படத்தில் இருவரும் இணைந்தோம். உண்மையான வில்லன் யார் என்றால், இருவரும் அவரவர் கதாபாத்திரங்களில் நடிக்கிறோம். ஒருவருக்கொருவர் வில்லன்கள்” என்றார்.
ஷாருக்கானிடம், ‘நீங்கள் வில்லனா அல்லது ஹீரோவா அல்லது வில்லனிக் ஹீரோவா?’ என கேட்டதற்கு, “ஒரு சாதாரண மனிதன், எல்லோருடைய பொது நலனுக்காகவும் பல அசாதாரணமான விஷயங்களை செய்கிறார்'' என்றார். மேலும், “என் இன்சூரன்ஸ் பாலிசி முடிந்து விட்டது. பலமுறை காயம் அடைவதால் எனக்கு யாரும் காப்பீடு செய்ய விரும்பவில்லை. மேலும் ஆக்ஷன் படங்களை செய்வதை விரும்புவதற்கு ஒரே காரணம்... என்னுடைய இளைய மகன் ஆப்ராம். அவர் ஆக்ஷன் -அனிமி மற்றும் சூப்பர் ஹீரோக்கள் கொண்ட படங்களை பார்க்க விரும்புவதால், அவருக்காக ஆக்ஷன் படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்'' என்றார்.
தனது கதாபாத்திரம் குறித்து விஜய் சேதுபதி பேசுகையில், “கதைகளை தேர்ந்தெடுப்பதில் நான் வல்லவன் என்பது எனக்குத் தெரியும். வேறு எதையும் என் தலைக்கு கொண்டு செல்ல விரும்பவில்லை. நான் செய்ய விரும்பாத கதாபாத்திரத்தைச் செய்தால், அது என் மனதை கெடுத்து விடும் என்று நம்புகிறேன்'' என்றார். முழு வீடியோவும் இங்கே:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT