Published : 18 Aug 2023 12:43 PM
Last Updated : 18 Aug 2023 12:43 PM
மும்பை: மும்பை போன்ற ஒரு நகரத்தில் குடும்பத்துடன் செலவிட குறைவான நேரமே ஒதுக்கப்படுகிறது என்றும், தன் பெற்றோரை விட்டு விட்டு தனியாக வாழ்வதை தன்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது என்றும் நடிகர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.
‘பா’, ‘சமிதாப்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பால்கி அடுத்ததாக ‘கூமர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அபிஷேக் பச்சன், சயாமி கெர் ஷபானா ஆஸ்மி, அங்கத் பேடி நடித்துள்ள இப்படத்துக்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். இப்படம் இன்று (ஆக.18) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படம் தொடர்பான புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அபிஷேக் பச்சனிடம், இந்திய இளைஞர்கள் தங்கள் பெற்றோருடன் ஒரே வீட்டில் வாழ்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:
“சமூகம், கலாசாரம், மரபுகள் என அனைத்தும் மாறி வருகின்றன. அதற்கேற்றபடி நாம மாறுகிறோம். இன்றைய வேகம் நிறைந்த வாழ்வில், மும்பை போன்ற ஒரு நகரத்தில் குடும்பத்துடன் செலவிட குறைவான நேரமே ஒதுக்கப்படுகிறது. என் பெற்றோரை விட்டு விட்டு தனியாக வாழ்வதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. குறிப்பாக அவர்களது இப்போதைய வயதை கணக்கில் கொள்ளும்போது. என் அப்பாவுக்கு 84. என் அம்மாவுக்கு 75.
நாம் அவர்களோடுதான் இருக்க வேண்டும். முடிந்தால் நாம் தான் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். கடவுளின் அருளால் என் பெற்றோர் இருவருமே சுறுசுறுப்பாகவும், சுதந்திரமாகவும் இருக்கிறார்கள். ஆனாலும், நம்மால் நம்மை கவனித்துக் கொள்ள முடியாத பருவத்தில் அவர்கள் நம்மை பராமரித்தது போல, அவர்களுக்கும் நாம் இருக்க வேண்டும்.
கூட்டுக் குடும்பம் என்பது இந்திய கலாசாரத்தின் ஓர் அங்கம். அனைவரும் ஒன்றாக அமர்ந்து, சிரித்துப் பேசி ஒருவேளை உணவு அருந்துவது மகிழ்ச்சியான தருணமாக இருக்கும். என்னுடைய 47 வயதிலும் நான் எனது பெற்றோர் இருவருடனும் மகிழ்ச்சியாக இருப்பது என்னுடைய அதிர்ஷ்டம்” என்று அபிஷேக் பச்சன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT