Published : 28 Jun 2023 08:25 AM
Last Updated : 28 Jun 2023 08:25 AM
மும்பை: மும்பை சாலைகளில் கனமழையில் நனைந்தபடி பூ விற்றுக் கொண்டிருந்த சிறுமியை தான் சந்தித்தது குறித்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
தனது இணையதளத்தில் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: அடைமழையில் பாதி நனைந்தபடி தன் கையில் சிவப்பு நிற ரோஜா மலர்களுடன் அவள் அங்கே நின்று கொண்டிருந்தாள். பூக்களை பிளாஸ்டிக் கவரில் சுற்றியபடி, டிராபிக்கில் ஒவ்வொரு கார் கண்ணாடியாக சென்று கொண்டிருந்தாள். அந்த பூக்களை விற்பதன் மூலம் தனது பசியையும், தனது குடும்பத்தில் இருக்கும் மற்ற சில குழந்தைகளின் பசியையும் ஆற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் மழை நனைத்த அவள் முகத்தில் குடிகொண்டிருந்தது.
நான் அவளை பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னர் அவளை அழைத்தேன். எனக்கு பின்னால் பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீஸ் கார், அவளை நோக்கி எச்சரிக்கை சமிக்ஞைகளை கொடுத்தது. ஒரு கணம் அவள் தயங்கினாள். எனினும் நான் அவளை அழைப்பதை கவனித்துவிட்டாள்.
என் ஜன்னல் கண்ணாடியை கீழிறக்கி, சோகம் தோய்ந்த அவளது முகத்தைக் கண்டேன். அவளிடன் ரோஜாக்களின் விலையை நான் கேட்கவில்லை. சில ரூபாய் நோட்டுகளை அவளிடம் கொடுத்தேன். அதில் எவ்வளவு இருக்கிறது என்று பார்க்கவோ, எண்ணவோ இல்லை. அது மிகவும் அவசியமா? இல்லை. தயக்கத்துடன் அவள் பணத்தைப் பெற்றுக் கொண்டாள். அதே தயக்கத்துடன் என்னிடம் பூங்கொத்தை ஒப்படைத்தாள். நான் பேரம் பேசுவேன் என்று அவள் நினைத்திருக்கலாம். நான் ‘அவ்வளவுதான் போ’ என்றேன்.
இந்தப் பதிவில் இதற்கு மேல் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் இன்னும் சில நாட்களுக்கு தன் பசியை மட்டுமின்றி தன் குடும்பத்தின் பசியையும் ஆற்றுவதற்கு கிடைத்த சன்மானத்தை பெறும்போது அந்த குழந்தையின் முகத்தில் எழுந்த உணர்வை பற்றி சொல்ல விரும்பினேன்.
இவ்வாறு அந்த பதிவில் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT