Published : 19 Jun 2023 03:44 PM
Last Updated : 19 Jun 2023 03:44 PM
நேபாளம்: ‘ஆதிபுருஷ்’ படத்தின் வசனம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் நேபாளம் தலைநகர் காத்மாண்டு மற்றும் சுற்றுலாத்தலமான போகராவில் படத்துக்கு தடைவிதிக்கப்பட்டதுடன், இனி எந்த இந்தி படங்களும் திரையிடப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் கடந்த ஜூன் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தின் ஒரு பகுதியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் சீதையாக நடிகை கீர்த்தி சனோன் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெறுள்ள ‘சீதை இந்தியாவின் மகள்’ என்ற வசனம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் இந்த வசனத்தை நீக்க கோரி நேபாளத்தில் போராட்டம் நடைபெற்றது.
இது தொடர்பாக நேபாளம் தலைநகர் காத்மாண்டு மேயர் பாலேந்திர ஷா கூறுகையில், “ஆதிபுருஷ் படத்தில் ‘ஜானகி (சீதை) இந்தியாவின் மகள்’ என இடம்பெற்றுள்ள வசனத்தை நீக்க வேண்டும். நேபாளத்தில் மட்டுமல்ல இந்தியாவில் திரையிடப்படும் இடங்களிலும் அந்த வசனம் நீக்கப்பட வேண்டும். காரணம் ஜானகி தென்கிழக்கு நேபாளத்தில் உள்ள ஜானக்பூர் பகுதியில் பிறந்தவர் என்பது பெரும்பாலானோரின் நம்பிக்கையாக இருக்கும் சூழலில் இப்படியொரு வசனம் இடம்பெற்றிருப்பதை ஏற்கமுடியாது.
ஆகவே இந்த வசனத்தை நீக்கும் வரை படத்தை திரையிட அனுமதிக்கமாட்டோம். மேற்கண்ட வசனம் படத்திலிருந்து இன்னும் நீக்கப்படாததால் ஜூன் 19-ம் தேதியிலிருந்து காத்மாண்டுவில் எந்த இந்திப் படமும் திரையிடப்படாது. ” எனத் தெரிவித்துள்ளார். சுற்றுத்தலமான போகரா பகுதியின் மேயர் தனராஜ் ஆச்சார்யாவும் இதே கருத்தை வலியுறுத்தி, இன்று முதல் ‘ஆதிபுருஷ்’ திரையிடப்படாது என அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT