Published : 15 Jun 2023 03:29 PM
Last Updated : 15 Jun 2023 03:29 PM
‘ஆதிபுருஷ்’ பட இயக்குநர் ஓம்ராவத் அனுமனுக்கு சீட் வழங்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில், சில மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் ஒரு சீட் ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வரும் ஜூன் 16-ஆம் தேதி வெளியாக உள்ளது. கடந்தாண்டு வெளியான இப்படத்தின் டீசர் கிண்டலுக்கு உள்ளானதையடுத்து ரூ.100 கோடிக்கு மேல் செலவு செய்து கிராஃபிக்ஸ் பணிகளை புதுபித்தது படக்குழு. இதனால், கடந்த ஜனவரி மாதம் வெளியாக வேண்டிய படம் தள்ளிவைக்கப்பட்டது.
இதையடுத்து படத்தின் புதுப்பிக்கப்பட்ட ட்ரெய்லர் திருப்பதியில் நடந்த ப்ரீ- ரிலீஸ் நிகழ்வின்போது திரையிடப்பட்டது. அப்போது பேசிய படத்தின் இயக்குநர் ஓம் ராவத், “ராமயணம் எப்போதெல்லாம் அரங்கேற்றப்படுகிறதோ அப்போதெல்லாம் அதைப் பார்க்க அனுமன் வருவார் என என்னுடைய அம்மா அடிக்கடி சொல்வார். எனவே ‘ஆதிபுருஷ்’ படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அனுமனுக்காக ஒரு சீட்டை காலியாக வைக்க வேண்டும் என தயாரிப்பாளரிடம் நான் கோரிக்கை வைக்கிறேன்” என்றார்.
இந்நிலையில் நாளை (ஜூன்16) ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள சூழலில், ஐநாக்ஸ், பிவிஆர் போன்ற சில மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் அனுமனுக்கென்று தனி சீட் ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரையரங்கின் முன்பகுதியில் இந்த இருக்கை ஒதுக்கப்படும் எனவும், அதில் அனுமனின் சிலை அல்லது புகைப்படம் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. மேலும், ஆந்திராவில் உள்ள வெங்கடேஸ்வரா திரையரங்கில் சீட் ஒதுக்கப்பட்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT