Published : 07 Jun 2023 10:05 AM
Last Updated : 07 Jun 2023 10:05 AM
மும்பை: பிரபாஸ் நடித்துள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தின் புதிய ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில், அதன் கிராபிக்ஸின் தரம் குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேலி செய்து வருகின்றனர்.
ராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வரும் ஜூன் 16ஆம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியான போது, அதன் மோசமான கிராபிக்ஸால் இணையத்தில் கடும் கிண்டலுக்கு உள்ளானது. இதன் எதிரொலியாக படத்தின் கிராபிக்ஸ் பணிகளை மேலும் ரூ.100 கோடிக்கு மேல் செலவு செய்து படக்குழு புதுப்பித்தது. இதனால் கடந்த ஜனவரி மாதம் வெளியாக வேண்டிய படம் தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட கிராபிக்ஸுடன் இப்படத்தின் புதிய ட்ரைலர் நேற்று (ஜூன் 6) வெளியானது. இதன் கிராபிக்ஸ் தரம் மீண்டும் ஒருமுறை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. சுமார் ரூ.700 கோடி பட்ஜெட்டில் உருவான படத்தின் கிராபிக்ஸ் சாதாரண வீடியோ கேமில் வரும் கிராபிக்ஸ் போன்ற இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ராமாயணத்தை இப்படி மட்டமான கிராபிக்ஸில் படமாக்கிய இயக்குநர் ஓம் ராவத்தை மன்னிக்கப் போவதில்லை என்று நெட்டிசன் ஒருவர் கோபமாக பதிவிட்டுள்ளார்.
இன்னொருபக்கம், ராமராக நடிக்க எந்தவித மெனக்கெடலிலும் பிரபாஸ் ஈடுபடவில்லை. ராமர் கதாபாத்திரத்துக்கு அவர் சுத்தமாக பொருந்தவில்லை என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
‘ஆதிபுருஷ்’ படத்தின் புதிய ட்ரெய்லர் வீடியோ:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT