Published : 02 Jun 2023 07:23 AM
Last Updated : 02 Jun 2023 07:23 AM
தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவில் பேசவைத்த ஆளுமைகளில் முக்கியமானவர் மணிரத்னம். 1983 தொடங்கி 40 ஆண்டுகளாக நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் மணிரத்னம் இன்று (ஜூன் 2) தனது 67வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
1960 தொடங்கி தமிழ் சினிமாவை ஒவ்வொரு பத்தாண்டுகளாக பிரித்தால் அவற்றில் ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா என்று அவற்றை வரிசைப்படுத்தினால், இந்த வரிசையில் 1980களில் தனக்கென ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தனி முத்திரையை பதித்தவர் மணிரத்னம்.
ஒரு படம் என்றால் திரைக்கதையைத் தாண்டி கலர் கலர் செட்கள், குரூப் டான்ஸர்களின் நடனம், மரத்தை சுற்றி டூயட், ஒவ்வொரு ஆளாக வரிசையாக வந்து அடிவாங்கும் வில்லனின் ஆட்கள் போன்ற விஷயங்கள் இடம்பெறவேண்டும் என்பது தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி. இவை அனைத்தையும் அடியோடு மணிரத்னம் மாற்றினார். சினிமா என்பது வசனத்தைத் தாண்டி காட்சி ரீதியாக சொல்லப்பட வேண்டிய கலை என்பதை தன் படங்களில் அழுத்தமான உணர்த்தினார்.
ஒவ்வொரு ஃப்ரேமிலும், நடிகர்களின் உடை, பேசும் மாடுலேஷன், லைட்டிங், எடிட்டிங், இசை என டெக்னிக்கல் அம்சங்களில் கூட தன்னுடைய டச் இருக்கும்படி பார்த்துக் கொள்வதுதான் மணிரத்னம் ஸ்டைல். அதில் இன்று வரை வழுவாமல் இருந்து வருகிறார்.
தன்னுடைய முதல் படமான ‘பல்லவி அனுபல்லவி’ கன்னட படத்திலேயே திரைத் துறையின் மிகச் சிறந்த ஜாம்பவான்களுடன் பணியாற்றும் வாய்ப்பு மணிரத்னத்துக்கு வாய்த்தது. இசை - இளையராஜா, ஒளிப்பதிவு - பாலுமகேந்திரா, எடிட்டிங் - லெனின் என அப்போதைய தொழில்நுட்ப மேதைகளுடன் தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கினார் மணிரத்னம். இதுவே அவரது தொழில்நுட்ப நேர்த்திக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது. அதன் பிறகு வந்த ‘பகல்நிலவு’, ‘மௌனராகம்’, ‘நாயகன்’ ‘தளபதி’ என இன்றைய ‘பொன்னியின் செல்வன்’ வரை மணிரத்னம் தேர்ந்தெடுக்கும் கதைக்களமும், கதை சொல்லல் முறையும் பார்வையாளர்களை கவரத் தவறியதில்லை.
இதில் 1985ல் வெளியான ‘மௌன ராகம்’ படத்தில்தான் மணிரத்னத்தின் முழுமையான ஆளுமை வெளிப்பட்டது. கதாபாத்திரத் தேர்வு தொடங்கி, ஒளிப்பதிவு, இசை, லைட்டிங், வசனம் என ஒவ்வொன்றிலும் ‘மணிரத்னம் டச்’ வியாபித்திருக்கும். இந்த ‘டச்’ தான் இன்று வரை வெளியாகும் பல படங்களுக்கு விதையாக அமைந்தது. அதன்பிறகு வந்த ‘அக்னி நட்சத்திரம்’ படம் முழுக்க லைட்டிங்கில் பல பரீட்சார்த்த முயற்சிகளை பி.சி.ஸ்ரீராமுடன் இணைந்து மேற்கொண்டிருந்தார் மணிரத்னம். இதன்பிறகுதான் கிசுகிசு எழுதும்போது கூட பத்திரிகைகள் ‘இருட்டில் படமெடுப்பவர்’ என்று மணிரத்னத்தை நக்கலாக குறிப்பிடத் தொடங்கின.
பிசி ஸ்ரீராம், சந்தோஷ் சிவன், ராஜீவ் மேனன், ரவி கே.சந்திரன் என எந்த ஒளிப்பதிவாளராக இருந்தாலும் அவர்களின் ‘ஒர்க்’ அவர்களின் மற்ற படங்களை விட மணிரத்னம் படங்களில் சற்றே மேம்பட்டிருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை. இது இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் கூட பொருந்தும். இன்னும் சொல்லப்போனால் இளையராஜாவை ‘மிகச் சரியாக’ பயன்படுத்திய மிகச் சில இயக்குநர்களில் மணிரத்னமும் ஒருவர்.
‘நாயகன்’, ‘தளபதி’, ‘ரோஜா’, ‘உயிரே’, ‘ஆய்த எழுத்து’ என இசையில் மணிரத்னம் மேற்கொண்ட பரிசோதனைகள் திரைத் துறையில் பல வாயில்களை திறந்துவிட்டன.
உறவுச் சிக்கல்களை பேசும் கதைகளின் பின்னணியில் ஒரு பெரிய சமூக சிக்கலும் முக்கிய அங்கம் வகிக்கும்படி எழுதுவது மணிரத்னத்தின் பாணி. ‘ரோஜா’வில் காஷ்மீர் பிரச்சினை, பம்பாயில் பாபர் மசூதி பிரச்சினை, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் இலங்கைப் போர் என அந்தந்த காலக்கட்டதில் நடந்த பிரச்சினைகளை கையிலெடுக்கப்பட்டிருக்கும். எனினும் அவை ஆழமாக பேசப்படாததால் அவரது படங்களில் இடம்பெறும் இந்த மேலோட்ட அரசியல் கடும் விமர்சனத்துக்கு ஆளாவதுண்டு.
‘ரோஜா’, ‘பம்பாய்’ தேசிய அளவில் பெற்ற கவனத்தை தொடர்ந்து முதல்முறையாக மணிரத்னம் நேரடியாக இந்தியில் இயக்கிய ‘தில் சே’, ‘யுவா’, ‘குரு’ போன்ற படங்கள் தெற்கிலிருந்து இயக்குநர்கள் பெரிதும் கோலோச்சாத பாலிவுட் துறையை திரும்பி பார்க்க வைத்தது. பான் இந்தியா என்ற பதமே புழக்கத்தில் இல்லாத காலகட்டத்திலேயே பான் இந்தியா படங்களை இயக்கினார் மணிரத்னம்.
2000-ன் தொடக்கத்தில் உலக மயமாக்கல் தன்னுடைய ஆக்டோபஸ் கரங்களை விரிக்கத் தொடங்கியிருந்த காலக்கட்டத்தில், அன்றைய இளைஞர்களின் காதலையும் அவர்களது வாழ்க்கை முறையையும் கண்முன் நிறுத்தியது ‘அலைபாயுதே’. அக்கால இளைஞர்களின் வாழ்க்கையில் அப்படம் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. ‘கடல்’, ‘காற்று வெளியிடை’ என பாக்ஸ் ஆபீஸில் சோபிக்காத அவரது படங்கள் கூட தொழில்நுட்ப ரீதியாக கவனம் பெற்றன. 2010-ஆம் ஆண்டு டைம்ஸ் இதழ், இதுவரை தயாரிக்கப்பட்ட மிகச் சிறந்த 100 படங்களை வரிசைப்படுத்தி பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அதில் சத்யஜித் ரேயின் அபு ட்ரையாலஜி மற்றும் குரு தத்தின் ‘பியாசா’ ஆகிய படங்களுக்கு இணையாக மணிரத்னத்தின் ‘நாயகன்’ படம் இடம்பெற்றிருந்தது.
தமிழ் சினிமாவின் பெருங்கனவான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இரண்டு பாகங்களையும் இயக்கி திரைக்கு கொண்டுவந்துவிட்ட மணிரத்னம், இதோ தனது அடுத்த பட வேலையையும் தொடங்கிவிட்டார். நாயகனுக்குப் பிறகு பல ரசிகர்களின் ஏக்கமாக இருந்துவந்த கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாத்தியமாகியிருக்கிறது.
எந்தவித முறையான பயிற்சியும் இன்றி சினிமா இயக்கத்துக்குள் நுழைந்தவர் இன்று பல இளம் இயக்குநர்களுக்கான பயிற்சிப் பட்டறையாக திகழ்கிறார். தனக்கென ஓர் இடத்தை உருவாக்கி, நான்கு தசாப்தங்களாக தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் மணிரத்னம்.
தமிழ் சினிமாவின் பல மூத்த இயக்குநர்கள் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு இளம் இயக்குநர்களுக்கு ஈடு கொடுக்க இயலாமல் ஒதுங்கி விட்டதுதான் வரலாறு. ஆனால், மணிரத்னம் அந்தந்த காலகட்டங்களுக்கான தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தன்னை புதுப்பித்துக் கொண்டு, இன்றைய இளம் தலைமுறை இயக்குநர்களுக்கு டஃப் கொடுத்து, 80ஸ் கிட்ஸ் தொடங்கி இன்றைய 2கே கிட்ஸ் வரை ரசிக்கும்படியான படங்களை தொடர்ந்து கொடுத்து வரும் மணிரத்னத்தை நாமும் வாழ்த்துவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT