Last Updated : 01 Jun, 2023 05:48 PM

 

Published : 01 Jun 2023 05:48 PM
Last Updated : 01 Jun 2023 05:48 PM

Spider-Man: Across the Spider-Verse Review: முதல் பாகத்தின் விறுவிறுப்புக்கு ஈடுகொடுத்ததா?

2018-ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதுமுள்ள சூப்பர் ஹீரோ ரசிகர்களை ஈர்த்த ‘ஸ்பைடர்மேன் இன் டூ தி ஸ்பைடர்வெர்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியிருக்கும் ’ஸ்பைடர்மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்வெர்ஸ்’ (Spider-Man: Across the Spider-Verse) படம் முதல் பாகத்தின் வெற்றியை தக்கவைத்ததா என்று பார்க்கலாம்.

முதல் பாகத்தில் முக்கியக் கதாபாத்திரமாக வந்த க்வென் ஸ்டேசியின் பின்னணி நமக்கு காட்டப்படுகிறது. க்வென்னின் யுனிவர்சில், போலீஸ் அதிகாரியான அவரது தந்தைக்கும், அவருக்கு ஏற்பட்ட மனக்கசப்பால் அந்த யுனிவர்சை விட்டு வேறொரு யுனிவர்ஸில் நுழைகிறார் ‘ஸ்பைடர்-வுமன்’ க்வென். மற்றொரு யுனிவர்ஸில் பதின்பருவ இளைஞர்களுக்கு உரிய சிக்கல்களை எதிர்கொண்டபடி தனது தாய் தந்தையருடன் வாழ்கிறார் ஸ்பைடர் மேனான மைல்ஸ் மொரேல்ஸ். முந்தைய பாகத்தில் மைல்ஸ் செய்த ஒரு தவறினால் உருவாகும் ‘ஸ்பாட்’ எனப்படும் வில்லன், தன்னிடமிருந்து அனைத்தையும் பறித்த மைல்ஸை பழிவாங்கியே தீர வேண்டும் என்று துடிக்கிறார்.

வில்லனுக்கான தேடலில் மைல்ஸ் மோரால்ஸ், க்வென்னை சந்திக்கிறார், பல்வேறு யுனிவர்ஸ்களுக்கு பயணப்படுகிறார். இந்திய ஸ்பைடர் மேனான பவித்ர பிரபாகரை சந்திக்கிறார் (இது கதையில் ஒரு முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்துகிறது), எல்லா வெர்ஷன் ஸ்பைடர் மேன்களையும் உள்ளடக்கிய ஸ்பைடர் சொசைட்டி என்ற இடத்துக்கு செல்கிறார். வில்லனின் திட்டம் என்ன? அதனை ஸ்பைடர்மேன்(கள்) முறியடித்தார்களா? - இதற்கான விடையை கலர்ஃபுல்லாக சொல்லியிருக்கிறது ’ஸ்பைடர்மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்வெர்ஸ்’.

2018-ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்பைடர்மேன் இன் டூ தி ஸ்பைடர்வெர்ஸ்’ படத்தை அனிமேஷன் படங்களில் ஓர் உச்சம் என்று தாராளமாக சொல்லலாம். திரைக்கதை மற்றும் டெக்னிக்கல் என ஸ்பைடர் மேன் படங்களையே தூக்கிச் சாப்பிடக்கூடிய அம்சங்கள் கொண்ட படம் அது. 2019-ஆம் ஆண்டு சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருதையும் இப்படம் தட்டிச் சென்றது. அந்தப் படத்தின் திரைக்கதையில் இருந்த விறுவிறுப்பும், சுவாரஸ்யங்களும் இப்படத்தில் இருக்கிறதா என்றால், சற்றே தயக்கத்துடன் தான் தலையை ஆட்ட வேண்டியிருக்கிறது.

டெக்னிக்கலாக முதல் பாகம் 8 அடி என்றால், இப்படம் 16 அடி பாய்ந்திருக்கிறது. தொடக்கம் முதல் இறுதி வரை ஓர் அனிமேஷன் படம் பார்க்கிறோம் என்ற உணர்வே எழாத வகையில் 2டியும் இல்லாமல் 3டியும் இல்லாமல் வடிவமைக்கப்பட்ட அனிமேஷன் அட்டகாசம். ஒரு அனிமேஷன் படத்துக்கு எடுத்துக் கொண்ட மெனக்கெடலும், படம் முழுக்க கொடுக்கப்பட்டிருக்கும் டீட்டெய்லிங்கும் வியக்க வைக்கின்றன.

ஒரு காட்சியில் க்வென் மற்றும் அவரது தந்தை இருவருக்குமான உரையாடலின்போது காட்சியின் பின்னணி இருவரது மனநிலையை பிரதிபலிக்கும்படி மாறிக் கொண்டே இருப்பது எந்த அனிமேஷன் படங்களிலும் இதுவரை பார்த்திராத ஒன்று. சில காட்சிகள் நேர்த்தியான ஓவியங்கள் போலவும், சில காட்சிகள் அலங்கோலமான வாட்டர் பெயின்ட் போலவும், சில காட்சிகள் பாப் ஆர்ட் பிதாமகன் ராய் லிச்சென்ஸ்டெய்னின் ஓவியங்களை நினைவுப்படுத்துவதாகவும் அமைந்திருக்கின்றன. இவை அனைத்தும் முதல் பாகத்திலேயே இடம்பெற்றிருந்தாலும், இந்தப் படத்தில் அது உச்சம் தொட்டுள்ளது.

படத்தின் தொடக்கத்தில் வரும் க்வென் கதாபாத்திரத்தின் பின்னணியே நம் பொறுமையை சோதித்து விடுகிறது. ஒரு ஐந்து நிமிடத்தில் சொல்லி முடிக்க வேண்டிய கதையை இழு இழு என்று இழுத்து அதன்பிறகு தான் நாயகனையே அறிமுகப்படுத்துகின்றனர். மைல்ஸின் யுனிவர்ஸ், அவரது பெற்றோருக்கும் அவருக்கும் இடையிலான சிக்கல், சூப்பர் வில்லன் ஸ்பாட் உடனான சண்டை என இதுவும் இழுவை தான் என்றாலும் இடையிடையே வரும் ஆக்‌ஷன் காட்சிகளும், நகைச்சுவரை கவுன்ட்டர்களும் கொட்டாவியிலிருந்து காப்பாற்றுகின்றன.

ட்ரெய்லரின் காட்டப்பட்ட ஸ்பைடர் சொசைட்டி, இந்திய ஸ்பைடர்மேன், பரபர ஆக்‌ஷன்கள் அனைத்தும் படம் தொடங்கி ஏறக்குறைய 1 மணி நேரத்துக்குப் பிறகுதான் வருகிறது. பவித்ர பிரபாகர் தொடர்பான காட்சிகளுக்குப் பிறகுதான் கிட்டத்தட்ட மெயின் கதையே தொடங்குகிறது. திரைக்கதையும் சூடு பிடிக்கிறது. அதன்பிறகு வரும் எதிர்பாராத திருப்பங்களும், விறுவிறுப்பான காட்சிகளும் சீட் நுனிக்குக் கொண்டு வருகின்றன. ஆனால், அதன் பிறகு சில நிமிடங்களிலேயே படம் முடிந்து போய்விடுவது சோகம்.

படத்தின் மெயின் வில்லன் ஸ்பாட் தான் எனும்போது அந்தக் கதாபாத்திரத்துக்கான அழுத்தமான காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை. முதல் பாகத்தின் பெரிய ப்ளஸ், அதன் எமோஷனல் காட்சிகள். அவை எளிதாக பார்வையாளர்களுடன் பொருந்திப் போகும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இப்படத்தின் படம் முழுக்க பல எமோஷனல் காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும் இரண்டாம் பாதியில் வரும் ஓரிரு இடங்களைத் தவிர பெரிதாக கனெக்ட் ஆக முடியவில்லை. அதேபோல படம் ஓடிக்கொண்டு இருக்கும்போது, க்ளைமாக்ஸே இல்லாமல் ‘டமால்’ என சீரியலைப் போல தொடரும் என்று போடுகையில் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

படத்தின் இரண்டாம் பாதியில் வரும் அந்த ஸ்பைடர் சொசைட்டி காட்சி வெகு சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. இதுவரை காலம் காலமாக காமிக்ஸ், கார்ட்டூன், திரைப்படங்கள், வீடியோ கேம்ஸ் என அனைத்திலும் இடம்பெற்ற ஏராளமான ஸ்பைடர் மேன்கள் அந்தக் காட்சியில் வருகின்றனர். இவை வெறித்தனமான மார்வெல் மற்றும் ஸ்பைடர்மேன் ரசிகர்களுக்கு ஓகே. ஆனால், இதற்கெல்லாம் சற்றும் தொடர்பில்லாத ஒரு சாதாரண சினிமா ரசிகரால் இவற்றை அனுபவித்து ரசிக்க முடியுமா என்பது தெரியவில்லை. அதே போல படத்தில் இடம்பெறும் அதிதீவிர அறிவியல் விளக்கங்களும் எல்லாருக்குமானது அல்ல.

அனிமேஷனிலும் தொழில்நுட்ப அம்சங்களிலும் இருக்கும் நேர்த்தியில் செலுத்திய கவனத்தை ஒரு கால் பங்கு திரைக்கதையில் செலுத்தியிருந்தாலும் முதல் பாகத்தின் வெற்றியை தக்கவைத்திருக்கும் ‘ஸ்பைடர்மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்வெர்ஸ்’.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x