Published : 29 May 2023 06:09 PM
Last Updated : 29 May 2023 06:09 PM
“தி கேரளா ஸடோரி ஒரு பிரச்சார படம்தான்” என பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.
சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படம் குறித்து அண்மையில் அபுதாபியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பேசிய கமல், “பிரச்சார படங்களுக்கு எதிரானவன் நான். தி கேரளா ஸ்டோரி ஒரு பிரசார சினிமா” என பேசியிருந்தார். இந்நிலையில், அவரைத் தொடர்ந்து இயக்குநர் அனுராக் காஷ்யப்பும் அதே கருத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அனுராக் காஷ்யப் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், “வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், இன்றைய காலக்கட்டத்தில் உங்களால் அரசியலிலிருந்து தப்பிக்க முடியாது. அரசியலற்ற சினிமா என்பது மிகவும் கடினமான ஒன்று. ‘தி கேரளா ஸ்டோரி’ போன்ற ஏராளமான பிரச்சார படங்கள் உருவாகி வருகின்றன. எதையும் தடை செய்வதற்கு முற்றிலும் எதிர்நிலைபாடு கொண்டவன் நான். ஆனால், அதேசமயம் ‘தி கேரளா ஸ்டோரி’ முழுமையான பிரச்சார படம். இதற்கு எதிரான பிரச்சார படங்கள் என்ற பெயரில் படங்களை எடுக்க நான் ஒருபோதும் விரும்புவதில்லை.
ஒரு திரைப்பட இயக்குநராக இருக்க விரும்புகிறேனே தவிர சமூக ஆர்வலராக அல்ல. நான் சினிமாவை உருவாக்குகிறேன். சினிமா என்பது யதார்த்தம் மற்றும் உண்மையை அடிப்படையாக கொண்டது” என்றார்.
மேலும் அவரிடம், ‘நாட்டின் சமூக-அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு படங்களை உருவாக்குவீர்களா?’ என கேட்டபோது, “நீங்கள் நேர்மையாக இருந்தால் அப்படியான படங்களை உருவாக்க முடியும். எந்த பக்க சார்மும் இல்லாமல் உண்மையாக உருவாக்கப்படும் எதையும் யாராலும் தடுக்க முடியாது” என்றார்.
இதனிடையே, ‘தி கேரளா ஸ்டோரி’ படம் குறித்த கமல்ஹாசனின் விமர்சனத்துக்கு அப்படத்தின் இயக்குநர் சுதிப்டோ சென் பேட்டி ஒன்றில் பதிலடி கொடுத்துள்ளார். அதை வாசிக்க > “பாசாங்கு, அற்பத்தனம்...” - கமல்ஹாசனுக்கு ‘தி கேரளா ஸ்டோரி’ இயக்குநர் பதிலடி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT