Last Updated : 26 May, 2023 04:10 PM

 

Published : 26 May 2023 04:10 PM
Last Updated : 26 May 2023 04:10 PM

கழுவேத்தி மூர்க்கன் Review: புதுமையும் அழுத்தமும் மிகுந்த ‘கன்டென்ட்’ தரும் அனுபவம் எப்படி?

ராமநாதபுரம் மாவட்டத்தின் தெக்குப்பட்டி கிராமத்தில் சாதியப் பாகுபாடுகள் நிரம்பிக் கிடக்கின்றன. மேலத் தெருவைச் சேர்ந்த மூர்க்கசாமியும் (அருள் நிதி) ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பூமிநாதனும் (சந்தோஷ் பிரதாப்) உயிர் நண்பர்கள். சாதிய பாகுபாடுகளிலிருந்து தன் மக்களை விடுவிக்க போராடும் பூமிநாதனுக்கு ஆதரவாக இருந்து தன் சொந்த சாதியினரையே எதிர்க்கிறார் மூர்க்கசாமி. இப்படியிருக்க அந்த ஊர் மாவட்ட செயலாளராக இருந்து பதவி பறிக்கப்பட்ட முனியராஜ் (ராஜசிம்மன்) அரசியல் லாபத்துக்காக பூமிநாதனை கொல்ல திட்டம் திட்டுகிறார். அவரின் திட்டம் நிறைவேறியதா? மூர்க்கன் எப்படி இதில் பலிகடாவானார் என்பது திரைக்கதை.

இருவேறு சமூகங்கள், அவர்களிடையேயான சாதியப் பாகுபாடு, ஒரே சமூகத்தின் இரண்டு பிரிவுகளில் உள்ள ஏற்றத் தாழ்வுகள், தங்களைச் சுற்றியிருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை காட்சிப்படுத்தியதில் ‘கழுவேத்தி மூர்க்கன்’ மற்ற வழக்கமான கிராமத்து கதைகளிலிருந்து விலகி நிற்கிறது. குறிப்பாக, ஒடுக்கப்படும் மக்களின் பக்கம் மற்ற சமூகத்தினர் நிற்க வேண்டிய தேவையையும், சுய சாதிப்பற்று சொந்த சாதிக்காரனையே எப்படி பலி கொடுத்துவிடும் என்பதையும் சொன்ன விதம் அடர்த்தி கூட்டுகிறது.

‘கொல பண்றது வீரம் இல்ல; 10 பேர காப்பாத்துறது தான் வீரம்’, ‘ஒருத்தன் தலைக்கு மேல நீங்க இருக்குறதா நெனைக்கிறீங்க, ஆனா நீங்களே இன்னொருத்த காலுக்கு கீழ தான்னு சொல்றாங்க”, ‘மீசைங்குறது வெறும் மயிர்’ போன்ற வசனங்கள் சொல்ல வந்த கருத்துகளுக்கு உறுதுணையாயிருப்பது படத்தின் கன்டென்ட்டை இன்னும் ஆழமாக்குகிறது.

இப்படியாக கனம் கூட்டும் இப்படம், அதை சொன்ன விதத்தில் உரிய அழுத்தமில்லாதல் ‘கிளிஷே’ காட்சிகளுக்குள் சிக்கித் தவிப்பது ஏமாற்றம். எந்த வேலைக்கும் போகாமல், சண்டித்தனம் செய்து, புல்லட்டில் சுற்றித் திரியும் நாயக கதாபாத்திரம், அவருக்கான ஒரு பள்ளிக்கூட காதல், காதலுக்கான பாடல்கள் என்ற வழமை இந்தப் படத்திலும் தப்பவில்லை. படத்தின் மையமான பூமிக்கும் மூர்க்கனுக்குமான நட்புக்கான காட்சிகளை வலுப்படுத்துவதற்கு பதிலாக காதல் காட்சிகளில் கவனம் செலுத்தியதால், இரண்டாம் பாதியில் நடக்கும் சம்பவங்கள் ஒட்ட மறுக்கின்றன. சொல்லப்போனால் பூமிக்கும் மூர்க்கனுக்குமான மாற்று சாதியைக் கடந்த நட்புக்கான காரணத்தில் அழுத்தமில்லை. படத்தின் இறுதியில் டைட்டிலுக்கு நியாயம் சேர்க்க வேண்டி வைக்கப்பட்ட காட்சியும், இழுத்துக்கொண்ட போன திரைக்கதையும், சில லாஜிக் மீறல்களும் சிக்கல்.

‘த்ரில்லரும் அருள்நிதியும்’ என ஒரு புத்தகமே போடும் அளவுக்கு த்ரில்லருடன் ஒட்டியிருந்தவரை பிரித்து அவருக்கு ‘மீண்டும்’ கிராமத்து முகம் கொடுத்திருக்கிறது இப்படம். முறுக்கு மீசை, மடித்துக்கட்டிய வேட்டி, இழுத்து பேசும் வட்டாரமொழி, கன்னத்தை ஆட வைக்கும் ஆக்ரோஷம் என அசல் ராமநாதபுரத்துக்கார இளைஞராக மிரட்டுகிறார். குறிப்பாக சந்தோஷ் பிரதாப்பின் அம்மாவிடம் அழும் காட்சி ஒன்றில் கலங்க வைக்கிறார்.

யாருக்கும் அடங்காமல், எதிர்த்து பேசும் திமிரான உடல்மொழியில் தனது வழக்கமான நடிப்பில் கிராமத்துப் பெண்ணாக ஈர்க்கிறார் துஷாரா. இரண்டாம் பாதியில் அவருக்கான வசனமும் கவனம் பெறுகிறது. தன் சமூக மக்களுக்கு ‘கல்வி’யின் வழியே விடுதலை பெற்றுத்தந்திட வேண்டும் என்ற முனைப்பு கொண்ட இளைஞனாக சந்தோஷ் பிரதாப் பொறுப்பை உணர்ந்து நடித்துள்ளார். எதிர்ப்பு குணம் கொண்ட அமைதியான இளைஞனாக அவரின் கதாபாத்திரம் எழுத்தப்பட்ட விதம் நேர்த்தி. காவல் துறை அதிகாரிக்கு முன்னால் எந்த தயக்கமுமில்லாமல் ‘கெத்தா’க பேசும் முனிஷ்காந்த் அப்ளாஸ் அள்ளுகிறார். சரத் லோகித்சவா, ராஜசிம்மன் உள்ளிட்டோர் தேவையை உணர்ந்து நடித்துள்ளனர்.

அருள்நிதியின் இன்ட்ரோ தொடங்கி நிறைய இடங்களில் டி.இமானின் பின்னணி இசை ரசிக்க வைத்து, சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது. ஸ்கீரினை விட்டு எதிரிகள் எதிர்புறம் விழுந்துவிடுவார்களோ என்ற அளவில் கே.கணேஷ்குமார் சண்டைக் காட்சிகளில் மெனக்கெட்டிருப்பதை உணர முடிகிறது. வெயிலை லைட்டிங்காக கொண்டு மொத்த கிராமத்தையும் அதன் அசல் தன்மை மாறாமல் காட்சிப்படுத்தியிருந்த ஸ்ரீதரின் கேமிராவும், அதற்கான நாகூரானின் ‘ஷார்ப்’ கட்ஸும் படத்திற்கு பலம்.

மொத்தத்தில் வழக்கமான கிராமத்து கதைக்கான திரைக்கதை மொழி கையாளப்பட்டிருந்தாலும், உள்ளடக்கத்திலும் சொல்ல முனைந்திருக்கும் விஷயங்களிலும் படம் புதுமை சேர்த்திகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x