Published : 25 May 2023 01:12 PM
Last Updated : 25 May 2023 01:12 PM
டிசி காமிக்ஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தி ஃப்ளாஷ்’ படத்தின் இறுதி ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
டிசி காமிக்ஸின் புகழ்பெற்ற கதாபாத்திரங்களில் ஒன்று ‘தி ஃப்ளாஷ்’. மின்னல்வேகமும், காலத்தை மாற்றும் சக்தியும் கொண்ட இந்த கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து இதுவரை கார்ட்டூன் தொடர்களும், வெப் சிரீஸ்களும் வெளியாகியுள்ளன. ஜஸ்டிஸ் லீக் உள்ளிட்ட சில படங்களில் தி ஃப்ளாஷ் கதாபாத்திரம் தோன்றினாலும் முதன்முறையாக இந்த கதாபாத்திரத்துக்கு என்று ‘தி ஃப்ளாஷ்’ என்ற படத்தை டிசி நிறுவனம் உருவாக்கியுள்ளது.
காலப் பயணத்தை வைத்து உருவாகியுள்ள இப்படத்தில், நாயகன் ஆலன், கடந்த காலத்தில் தான் செய்த தவறுகளால் தனது அம்மாவின் உயிருக்கும், அப்பாவின் எதிர்காலத்துக்கும் ஏற்பட்டிருக்கும் ஆபத்துகளை சரி செய்ய மீண்டும் கடந்த காலத்துக்கு சென்ற அந்தத் தவறுகளை சரி செய்ய முயல்கிறான் என்பதே இந்தப் படம்.
ட்ரெய்லர் எப்படி?: நீண்டகாலமாக டிசி படங்களின் தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் டிசி ரசிகர்களுக்கு இப்படத்தின் ட்ரெயலர் புத்துணர்வை கொடுத்துள்ளது. ஏற்கெனவே இப்படத்தில் இடம்பெறப் போகும் டிசி காமிக்ஸ் கதாபாத்திரங்களை படக்குழு அறிவித்து விட்டாலும், அவை படத்தில் எப்படி பயன்படுத்தப்போகின்றன என்பதில் ரசிகர்களுக்கு சந்தேகம் இருந்து வந்தது. அது ஏற்கெனவே வந்த முதல் ட்ரெய்லரில் தீர்ந்து விட்டாலும், இப்போது வந்திருக்கும் இறுதி ட்ரெய்லரின் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. இப்படத்தில் மல்ட்டிவெர்ஸ் கதைக்களம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்திய பேட்மேனான பென் அஃப்லெக் மற்றும் பழைய பேட்மேனான மைக்கேல் கீட்டன் இருவருமே இப்படத்தில் வருகின்றனர். அதிலும் ட்ரெய்லரில் மைக்கேல் கீட்டன் வரும் இடங்கள் சரவெடி. இது தவிர ஏற்கெனவே ரசிகர்களுக்கு பரிச்சயமான கதாபாத்திரங்களான சூப்பர்கேர்ள், ஜெனரல் ஸாட் ஆகியோரும் இதில் இடம்பெற்றுள்ளனர்.
மார்வெல் பாணியிலான மல்டிவெர்ஸ் கதைக்களத்தை முதல்முறையாக கையிலெடுத்திருக்கும் டிசி யுனிவர்ஸுக்கு இந்த படம் மூலம் விடிவுகாலம் பிறக்குமா என்பதை தெரிந்துகொள்ள ஜூன் 16 வரை காத்திருக்க வேண்டும்.
‘தி ஃப்ளாஷ்’ இறுதி ட்ரெய்லர் வீடியோ:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT