Published : 24 May 2023 02:17 PM
Last Updated : 24 May 2023 02:17 PM

“இளையராஜா மீதான பலரது புரிதல் தவறானது” - அனுபவம் பகிர்ந்த தியாகராஜன் குமாரராஜா

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா குறித்தும், அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்தும் ஒரு விரிவான விளக்கத்தை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா கொடுத்துள்ளார்.

தியாகராஜன் குமாரராஜா தயாரிப்பு மேற்பார்வையில் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் கடந்த 18-ஆம் தேதி ஆந்தாலஜி தொடர் ‘மாடர்ன் லவ்: சென்னை’ வெளியானது. ராஜுமுருகன், பாலாஜி சக்திவேல், கிருஷ்ணகுமார் ராம்குமார் , அக்‌ஷய் சுந்தர், பாரதிராஜா மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகிய ஆறு இயக்குநர்களின் படைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்தத் தொடருக்கு இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார், மற்றும் ஷான் ரோல்டான் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

இந்தத் தொடர் குறித்து சமீபத்தில் தியாகராஜன் குமாரராஜா அளித்த பேட்டி ஒன்றில், இளையராஜா குறித்தும் அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்தும் ஒரு விரிவான விளக்கத்தை அவர் அளித்திருந்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: “உங்கள் ஹீரோக்களை அருகில் சென்று பார்க்காதீர்கள் என்று சொல்வார்கள். ஆனால் இளையராஜாவின் அருகில் சென்ற பிறகுதான் அவரை எனக்கு முன்பை விட இன்னும் அதிகமாக பிடிக்கிறது.

இளையராஜா அதிகம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டவர். அவர் மிகவும் பணிவானவர். அதையே பலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அவருடன் பணியாற்றுவது மிகவும் கடினம் என்று பலர் சொல்கிறார்கள். ஆனால், அதில் உண்மை கிடையாது. அவரைப் பொறுத்தவரை அவருடைய நேரத்தை வீணடிக்க கூடாது. அவரிடம் சென்று நம்முடைய புத்திசாலித்தனத்தை காட்ட முயற்சிக்கக் கூடாது. ஏனென்றால், அதைப் பற்றி அவர் அக்கறைப்பட மாட்டார். அவருக்கு பிடிக்காத படத்தை அவரிடம் கொண்டு சென்றால் கூட அவர் இந்தப் படம் சரியில்லை என்று நேரடியாக சொல்லிவிடுவார். ஆனால், அதன்பின்னர் அப்படத்தை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பதில் ஈடுபாடு காட்ட ஆரம்பித்து விடுவார். இந்தத் தெளிவை புரிந்துகொண்டால் அவரைப் புரிந்து கொள்வது எளிதாகிவிடும்.

நீங்கள் 200 அடிக்கு ஒரு கம்பத்தை நட்டு வைத்தால், இளையராஜா அதை தாண்டி குதிப்பார். 10 ஆயிரம் அடிக்கு வைத்தாலும், அதைத் தாண்டி குதிப்பார். நிலாவில் வைத்தால் அவர் அதையும் தாண்டி விடுவார். நமக்கு எது தேவை என்று நாம் சொல்கிறோமோ அதை அவர் கொடுப்பார். அது நம் கையில்தான் இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் அவருடன் சென்று பணிபுரிய வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் எப்போதும் இளமையானவர். அவருடைய வேகத்துக்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாது.

நான் சொல்வது மிகைப்படுத்துவது போல தோன்றலாம். 100 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இருக்கும் முக்கியஸ்தர்களை குறைத்து குறைத்து மிகவும் முக்கியமான அல்லது அதிக தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு நபராக கொண்டு வந்தால் அது அவராகத்தான் இருப்பார். அது நடிகர்களாக இருக்கலாம், கவிஞர்களாக இருக்கலாம். ஆனால் அந்த கடைசி மனிதனாக இளையராஜாவே இருப்பார். அவரிடம் சென்று முட்டாள்தனமாக பேசினால் அவருக்கு பிடிக்காது. முட்டாள்தனத்தை அவர் சகித்துக் கொள்ளவே மாட்டார். அவரிடம் தெரியாது என்று சொல்லிவிடலாம். ஆனால், தெரியாததை தெரிந்தது போல அவரிடம் பேசினால் பிரச்சினை வரலாம்” என்று தியாகராஜன் குமாரராஜா கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x