Published : 18 May 2023 08:46 PM
Last Updated : 18 May 2023 08:46 PM
சென்னை: ஜல்லிக்கட்டு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, “இது ஒட்டுமொத்த தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி” என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதலை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஏற்றுக் கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தடையில்லை என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பு, தமிழரின் கலாச்சாரத்துக்குக் கிடைத்த சட்டப்பூர்வ அங்கீகாரம்.
இயற்கையோடும், விலங்குகளோடும் இணைந்து வாழும் தமிழக மக்களால் ஒருபோதும் கால்நடைகளுக்குத் துன்பம் ஏற்படாது என்பதை நாட்டின் தலைமை நீதிமன்றமே ஒப்புக்கொண்டதுடன், ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தமிழ்நாட்டுக் கலாச்சாரத்துடன் ஒருங்கிணைந்தது என்றும் அங்கீகரித்துள்ளது பெருமைக்குரியது.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக புரட்சிப் போராட்டம் நடத்திய இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும், உரிய ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, திறமையாக வாதாடி, சட்டப்போராட்டம் நடத்திய தமிழக அரசுக்கும் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒட்டுமொத்த தமிழர்களுக்குக் கிடைத்த வெற்றி!” என பதிவிட்டுள்ளார்.
அதேபோல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “6 ஆண்டுகளுக்கு முன் நம்மவர்களின் அகிம்சை வழி வீர தீர சூரத்தை சாட்சியாய் கண்டேன். போராட்டத்தில் நானும் ஒரு துளியாய் நின்றேன்.அரசின் ஆணையை உறுதி செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பில் மெய்சிலிர்த்து போனேன். தமிழர் ஒற்றுமை வென்றது” என பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT