Published : 17 May 2023 04:14 PM
Last Updated : 17 May 2023 04:14 PM
“படத்தின் தயாரிப்பாளர்களிடம் சிலர், மணிகண்டனை வைத்து படமெடுக்கிறீர்களே... இது தேவையா? என அச்சுறுத்திருக்கிறார்கள்” என நடிகர் மணிகண்டன் பேசியுள்ளார்.
மணிகண்டன் நடிப்பில் கடந்த மே 12-ம் தேதி வெளியான ‘குட் நைட்’ படம் வெற்றிபெற்றதையடுத்து படக்குழு சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் மணிகண்டன் பேசுகையில், “இயக்குநரை சந்தித்து கதை கேட்டபோது, அவர் கதை சொன்ன விதம் எனக்கு பிடித்திருந்தது. கதை சொல்லிக் கொண்டிருக்கும்போது இடையில் நிறுத்திவிட்டு, இந்த இடத்தில் இந்த இசை இடம் பெறும் என்பார். அதன் பிறகு இசை ஒலித்துக் கொண்டிருக்கும் போதே மீதமுள்ள கதையை விவரிப்பார். பிறகு இசையை நிறுத்திவிட்டு, வேறொரு காட்சியில் இருந்து கதையை சொல்லத் தொடங்குவார். இவர் கதையை புரிந்து கொண்டிருக்கும் விதமும், அதனை தெளிவாக எடுத்துரைக்கும் பாணியும் தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தை உண்டாக்கியது.
இப்படத்தின் தயாரிப்பாளர்களிடம் சிலர், மணிகண்டனை வைத்து படமெடுக்கிறீர்களே..? தேவையா? என அச்சுறுத்திருக்கிறார்கள். அதற்கு அவர் இந்தக் கதை மீதும், மணிகண்டன் மீதும், இந்தப் பட குழுவினர் மீதும் நம்பிக்கை இருக்கிறது என பதிலளித்திருக்கிறார். எனக்கே என் மீது இத்தகைய நம்பிக்கை இல்லாதபோது, என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கும், ரமேஷ் திலக்கிற்கும் இருக்கும் நட்பு வித்தியாசமானது. எனக்கு விஜய் சேதுபதி எப்படி ஒரு அண்ணனாக, வழிகாட்டியாக, இருக்கிறாரோ, அதேபோல் தான் ரமேஷ் திலக்கும் என் வளர்ச்சியில் அக்கறை காட்டி வருகிறார். அவரால்தான் இந்தப் படக் குழுவினர் எனக்கு அறிமுகமானார்கள். இந்தப் படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் நட்புடனும், உரிமையுடனும் பழகினர். அந்த அனுபவம் மறக்க இயலாது. இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்க ஒப்புக்கொண்ட பிறகு தான், இது ஒரு திரைப்படம் என்றே பலரும் ஏற்றுக் கொண்டனர். அவரும் இப்படத்திற்காக கடுமையாக உழைத்து இன்றைய வெற்றியை சாத்தியப்படுத்தி இருக்கிறார்'' என்றார்.
நடிகர் ரமேஷ் திலக் பேசுகையில், “தயாரிப்பாளரை சந்தித்து, ஒரு முறை எங்களை எல்லாம் நம்பி படமெடுக்குறீர்களே பயமில்லையா? என கேட்டேன். அதற்கு அவர், ‘படத்தின் வெற்றி தோல்வியை கடந்து மனதிற்கு நிறைவை தரும் கதையை படமாக தயாரித்திருக்கிறேன். இந்த மகிழ்ச்சி எனக்கு படப்பிடிப்பு தளத்திலேயே கிடைத்திருக்கிறது’ என்றார். இதற்காக அவருக்கு பிரத்யேக நன்றியினை பதிவு செய்து கொள்கிறேன்.
இப்படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் அறிமுகமான ‘வாய்மூடி பேசவும்’ என்ற படத்தில் நான் நடித்திருக்கிறேன். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய இசையமைப்பில் தயாரான இந்தப் படத்தில் நான் நடித்திருக்கிறேன். நாங்கள் கடுமையாக உழைத்து ஒரு காட்சியில் நடித்திருந்தாலும், அந்தக் காட்சியை பின்னணியிசை தான் மேம்படுத்தும். இயக்குநர் விநாயக் என்னுடைய மனதில் இருந்த சில விசயங்களை நுட்பமாக கண்காணித்து, எனக்கு பொருத்தமான கதாபாத்திரத்தை வழங்கினார். அவர் இதற்கு முன் ஒரு குறும்படத்திற்காக என்னை அணுகி கதை சொல்லி இருந்தார். அந்தக் கதையைக் கேட்டபோது உண்மையிலேயே வியந்தேன். ஆனால் அது நிறைவேறவில்லை. அதற்கு பதிலாக அதைவிட வலிமையான கதாபாத்திரத்தை இப்படத்தில் வழங்கினார்.
பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் அழலாம். அழுவதில் பாலினக் கட்டுப்பாடு இல்லை. படத்தில் மோகனின் அம்மா, மோகனின் மனைவியிடம் திருமணமான பிறகு ‘ஏதாவது விசேஷம் இல்லையா?’ என கேட்பார். அதற்கு நாயகி பதிலளிப்பது பொருத்தமாக இருந்தது. இந்த இடத்தில் இயக்குநர் விநாயக்கின் எழுத்து - சமூகத்தின் பிரதிபலிப்பாக இருந்தது. ஏனெனில் என்னுடைய வாழ்க்கையிலும் இதனை கடந்திருக்கிறேன். இது போன்ற நல்ல வாய்ப்பை வழங்கிய இயக்குநர் உள்ளிட்ட படக் குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT