Published : 16 May 2023 10:13 AM
Last Updated : 16 May 2023 10:13 AM

'இருட்டுக்குள் நடக்கும் ஒரு குற்றம்!' - இயக்குநர் தயாள் பத்மநாபன்

இயக்குநர் தயாள் பத்மநாபன், நடிகை வரலட்சுமி

கன்னடத்தில் 18 படங்களை இயக்கிய தயாள் பத்மநாபன், ‘கொன்றால் பாவம்’ படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படம் வரவேற்பைப் பெற்ற நிலையில், அடுத்து ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். ஆஹா ஓடிடி தளத்தில் 19-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படம் பற்றி, தயாள் பத்மநாபனிடம் பேசினோம்.

‘கொன்றால் பாவம்’ படத்துக்குப் பிறகு உடனடியா இன்னொரு படத்தை முடிச்சிட்டீங்களே..!

‘குரங்கு பொம்மை’ படத்தை கன்னடத்தில் ரீமேக் பண்ணி, 2022-ல் வெளியிட்டேன். அப்ப தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் சார் ஃபோன் பண்ணி, நீங்க தமிழ்ல இயக்க இருக்கிற ‘கொன்றால் பாவம்’ படத்தை ஆஹாவுக்கு பண்ணலாம்னு சொன்னார். ‘இல்ல சார், என் முதல் தமிழ்ப் படம் தியேட்டர்ல ரிலீஸாகணும்னு நினைக்கிறேன். உங்களுக்கு வேற கதைச் சொல்றேன்’னு சொல்லிட்டு, ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ கதையை சொன்னேன். ‘கொன்றால் பாவம்’ முடிஞ்சு ரிலீஸ் ஆனதுமே இதை ஆரம்பிச்சுட்டேன். 2 விஷயம் நடக்கணும்னு நினைச்சேன். என் முதல் தமிழ்ப்படம், தியேட்டர்ல வெளியாகி வரவேற்பு பெறணும். அடுத்தப் படத்தை உடனடியா ஆரம்பிக்கணும். இது ரெண்டும் நடந்திருக்கு.

இதுவும் கிரைம் த்ரில்லர்தானா?

ஆமா. கரோனா காலகட்டத்துல உருவான கதை. அப்ப அடிக்கடி கரன்ட் போகும். அந்த நேரத்துல இருட்டுக்குள்ள ஒரு கிரைம் நடந்தா, அதுக்கு என்ன சாட்சி? எப்படி கண்டுபிடிப்பாங்கன்னு யோசிச்சேன். இந்தக் கதை உருவாச்சு. போலீஸ் ஸ்டேஷனுக்குள்ள நடக்கிற கதைங்கறதால செட் போட்டு ஷூட் பண்ணியிருக்கோம். நிறைய திருப்பங்கள் இருக்கும்.

கத்ரி கோபால்நாத் மகன் மணிகாந்த் கத்ரி இசை அமைச்சிருக்காராமே?

கன்னடத்துல அவர் பிசி இசை அமைப்பாளர். தமிழ்ல சில படங்கள் பண்ணியிருக்கார். இதுல பின்னணி இசையும் பாடல்களும் நல்லாயிருக்கும். புதுமையான சவுண்ட்களை பயன்படுத்தி இருக்கார். தொழில்நுட்ப ரீதியாகவும் இது வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும்.

வரலட்சுமியை இதுல மீண்டும் இயக்கி இருக்கீங்க...

‘கொன்றால் பாவம்’ கடைசி நாள் ஷூட்டிங்ல, நடிச்சுட்டிருந்த வரலட்சுமிகிட்ட இந்தக் கதையை சொன்னேன். அவங்க தெலுங்குலயும் நடிச்சிட்டு இருக்காங்க. ஓடிடி-ல ரிலீஸாகும்போது, அவங்க நடிச்சா பிசினஸுக்கும் நல்லாயிருக்கும்னு நினைச்சோம். அப்படித்தான் அவங்க இந்தக் கதைக்குள்ள வந்தாங்க. வரலட்சுமி, உதவி ஆய்வாளரா நடிச்சிருக்காங்க. ஆரவ், ஏசிபி-யா வர்றார். சந்தோஷ் பிரதாப், மஹத், சுப்ரமணிய சிவான்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க. கன்னடத்துல பிஸியான சந்துரு ஒளிப்பதிவு பண்ணியிருக்கார்.

நேரடியா ஓடிடி ரிலீஸ் ஏன்?

தியேட்டருக்கும் ஏற்ற படம்தான் இது. ஆஹா, சில படங்களை நேரடியா தங்கள் தளத்துல வெளியிடணும்னு நினைப்பாங்க. அதனால நேரடியா ஓடிடில வெளியிடறோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x