Published : 15 May 2023 06:37 PM
Last Updated : 15 May 2023 06:37 PM
சென்னை: “கடன் வாங்கி தானம் செய்தவர் மயில்சாமி. என்னிடத்தில் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் தனக்காக எதுவும் கேட்கவே மாட்டார். யாராவது ஒருவருக்கு உதவி செய்வதற்காக தான் அவரது அழைப்பு வரும்” என நினைவேந்தல் கூட்டத்தில் நடிகர் கார்த்தி உருக்கமாக பேசியுள்ளார்.
மறைந்த நடிகர்கள் மனோபாலா, டிபி.கஜேந்திரன், மயில்சாமி ஆகியோருக்கான நினைவேந்தல் நிகழ்வு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் தி.நகரில் உள்ள சர்.பிடி.தியாகராய மஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, நடிகர் சங்க துணைத்தலைவர் பூச்சி முருகன், தமிழ் தயாரிப்பாளார்கள் சங்க செயலாளர் ராதா கிருஷ்ணன், சச்சு, ரோகிணி,தேவயானி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் நடிகர் கார்த்தி பேசுகையில், “இந்த மூன்று பேருமே மக்களை மகிழ்வித்துள்ளனர். டி.பி.கஜேந்திரன் எப்போதுமே பாசிட்டிவ் எண்ணம் கொண்டவர். ஆளுமை மிக்கவர். மயில்சாமியுடன் சிறுத்தை படத்தில் இணைந்து நடித்தேன். தனக்கு மிஞ்சி தான் தானம் என்று சொல்வார்கள். ஆனால் ஒரு மனிதன் கடன் வாங்கி தானம் செய்கிறான் என்றால் அது மயில்சாமி ஒருவராக தான் இருக்கும்.என்னிடத்தில் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் தனக்காக எதுவும் கேட்கவே மாட்டார். யாராவது ஒருவருக்கு உதவி செய்வதற்காக தான் அவரது அழைப்பு வரும். எம்ஜிஆரின் கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்து மறைந்துள்ளார். இப்படி அவரைப்பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
மனோபாலாவை பொறுத்தவரை பல நிகழ்வுகளின் அவரே பொறுப்பை எடுத்துக் கொள்வார். ஏதாவது வாக்குவாதம் போன்றவை நிகழ்ந்ததாக தெரிய வந்தால் அன்று இரவே அழைத்து அதை சமரசமாக முடித்து வைப்பார். எல்லோருடனும் தொடர்ந்து நட்பில் இருப்பார். மூன்று பேரையும் மிஸ் பண்ணுகிறோம். அவர்களது குடும்பத்துடன் நிச்சயம் நாங்கள் இருப்போம்” என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT