Published : 12 May 2023 07:43 PM
Last Updated : 12 May 2023 07:43 PM

“வன்முறைக்கு மாற்று அன்பு மட்டுமே” - இயக்குநர் ராஜூமுருகன்

இயக்குநர் ராஜூமுருகன்

"வன்முறைக்கு மாற்று அன்பு மட்டுமே; அந்த அன்பை போதிப்பது காதல்தான்" என இயக்குநர் ராஜூமுருகன் பேசியுள்ளார்.

அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘மாடர்ன் லவ்’ ஆந்தாலஜி வெப் தொடரின் இந்திய பதிப்பான ‘மாடர்ன் லவ் - சென்னை’ தொடர் மே 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் ராஜுமுருகன், “ஏழு வயதில் ஒரு இரவு நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் தங்குவதற்காக தயக்கம் தெரிவித்து அருகில் உள்ள திரையரங்கத்தில் பாரதிராஜாவின் ‘கடலோரக் கவிதைகள்’ எனும் திரைப்படத்தை பார்ப்பதற்காக என்னுடைய தந்தையார் என்னை முதன் முதலாக அழைத்துச் சென்றார். ஏழு வயதில் நான் பார்த்த முதல் திரைப்படமே காதல் திரைப்படம் தான்.

அந்த திரைப்படம் மனதில் ஏற்படுத்திய சலனங்கள், என்னுடைய ஆழ்மனதில் பதிந்தன. அந்தத் திரைப்படத்தை ஏறக்குறைய நூறு முறைக்கு மேல் பார்த்திருப்பேன். அதில் இடம்பெறும் அனைத்து வசனங்களும் எனக்கு அத்துபடி. இவைதான் என்னை கலை உலகத்திற்கு அழைத்து வந்திருக்கும். அத்தகைய பாதிப்பை ஏற்படுத்திய இயக்குநருடன் ஒரே மேடையில் அமர்ந்திருப்பது மகிழ்ச்சியான அனுபவம்.

கரோனா காலகட்டத்தின் போது நண்பர் தியாகராஜன் குமாரராஜா போன் மூலம் தொடர்பு கொண்டு மார்டன் லவ் படைப்பை குறித்து பேசினார். அந்த காலகட்டத்தின் போது பலரும் மன அழுத்தத்தில் இருந்தனர். எனக்கு எதையாவது எழுதத் தொடங்கினால் உடனடியாக அரசியல் வந்துவிடுகிறது. இது மிகப்பெரும் சிக்கலாக உருவெடுத்து விட்டது. இந்த மன சிக்கலிலிருந்து வெளியே வரவேண்டும் என்று நானே பல காலமாக திட்டமிட்டிருந்தேன். அதன் போது தியாகராஜன் குமாரராஜா மாடர்ன் லவ் என்று சொன்னதும் உடனடியாக ஒப்புக் கொண்டேன்.

உலகம் மாற மாற அனைத்துக்கும் ஒரு மாற்று வழி வந்து விட்டது. ஆனால் மனிதனுக்கு மாற்று கிடைக்காத ஒரே விசயம் காதல்தான். அன்பு செலுத்த இயந்திரங்களுக்கு தெரியாது. ஒருவேளை உடலுறவைக் கூட இயந்திரங்கள் வழங்கலாம். ஆனால் அன்பை செலுத்த தெரியாது. ஏனெனில் காதல் என்பது ஒரு உணர்வு. அதனால் தான் காதல் எப்போதும் அனைத்து இடத்தில் இருக்கிறது.

வன்முறை எண்ணங்களுக்கு மாற்று அன்பு மட்டும் தான். ஒரு சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்திச் செல்ல வேண்டும் என்றால், மக்களை அன்பு மயப்படுத்த வேண்டும். மனிதர்கள் அடிப்படையில் வேட்டையாடிகள் தான். இதைத்தான் அம்பேத்கரும், பெரியாரும், தேர்தல் அரசியலை தவிர்த்து மக்களை மனித நேயத்திற்கு பழக்கப்படுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தினர். அன்பை போதிப்பது காதல் மட்டும் தான்.

காதலின் அனைத்து கோணங்களும் இந்த அத்தியாயங்களில் இடம் பிடித்திருக்கிறது. இன்றைய சூழலில் கிரைம் திரில்லர், ஆக்சன் படைப்புகள் அதிகம் வெளியாகி மக்களின் மனதை திசை திருப்பி அழைத்துச் செல்கிறது. இத்தகைய சூழலில் காதலை முதன்மைப்படுத்தி படைப்பை உருவாக்குவது அவசியமானது. இதன் காரணமாகத்தான் இந்த அத்தியாயத்தை இயக்க ஒப்புக் கொண்டேன்.

'லாலாகுண்டா பொம்மைகள்' என்பது சென்னையில் உள்ள ஒரு பகுதி. இந்தப் பகுதியில் நடைபெறும் கதை. நாம் அனைவரும் பொம்மைகள்தான். '' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x