Published : 08 May 2023 11:15 AM
Last Updated : 08 May 2023 11:15 AM
ஜோத்பூர்: ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்த நபர் மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. இப்படத்தில், கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக காட்டப்பட்டுள்ளது. இப்படத்துக்கு எதிராக கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வந்தன. இப்படம் கடந்த மே 05ஆம் தேதி நாடு முழுவதும் வெளியானது.
இந்த நிலையில் ராஜஸ்தானில் இப்படத்துக்கு சமூக வலைதளத்தில் பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்த நபர் மீது சிலர் சரமாரி தாக்குதல் நடத்தினர்.
இது குறித்து ஜோத்பூர் பகுதியைச் சேர்ந்த விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் உறுப்பினரான அந்த நபர் அளித்துள்ள புகாரில், கடந்த சனிக்கிழமை (மே 07) அன்று இரவு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, தன்னை மூன்று மர்ம நபர்கள் தடுத்து நிறுத்தி தாக்கியதாகவும், தன்னை ''கொன்று விடுவோம்'' என்று மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.
முன்னதாக அந்த நபர் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை பொதுமக்கள், குறிப்பாக இளம் பெண்கள் பார்க்க வேண்டும் என்று பதிவிட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஒரு சிறுவன் உட்பட மூன்று பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT