Published : 06 May 2023 02:50 PM
Last Updated : 06 May 2023 02:50 PM
கேரளாவின் காசர்கோடு பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரிக்கு, அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஷாலினி (ஆதா ஷர்மா), கீதாஞ்சலி (சித்தி இத்னானி), நிமா (யோகிதா பிகானி), ஆசிஃபா (சோனியா பலானி) ஆகியோர் வந்து சேர்கின்றனர். இந்த 4 பேரும் ரூம் மேட்ஸ் என்ற அளவில் நண்பர்களாகி விடுகின்றனர். இதில் முஸ்லிமான ஆசிஃபா மற்ற 3 பேரிடமும் தொடர்ந்து இஸ்லாம் மதம் குறித்து பேசி, அவர்களைப் பல்வேறு வழிகளில் மூளைச்சலவை செய்ய, ஒருகட்டத்தில் ஷாலினியும், கீதாஞ்சலியும் மதம் மாறுகின்றனர். நிமா மட்டும் நழுவி விடுகிறார். இறுதியில் இந்த இரண்டு பேரையும் ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்போடு சேர்க்கும் அஜெண்டாவில் ஆசிஃபாவின் முயற்சி பலித்ததா, இல்லையா என்பதே திரைக்கதை.
‘உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம்’ என குறிப்பிடப்படும் இப்படம் எந்த இடத்திலும் ‘கடுகு’ அளவுக்கும் நம்பக்கத்தன்மையை சேர்க்கவில்லை. காரணம், விடுதியில் சந்திக்கும் 4 மாணவிகளும் தொடக்க காட்சியிலிருந்தே மதம் குறித்தும், கடவுள் குறித்தும், மத வழிபாடுகள் குறித்தும் சதா உரையாடிக்கொண்டே இருக்கின்றனர். அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு காட்சியிலும் பெயரளவுக்குகூட வேறு எதைப் பற்றியும் பேசாமல், மதத்தை மட்டுமே பேசுவது அப்பட்டமான செயற்கைக் காட்சிகள்.
அதேபோல, பலவீனமாக எழுதப்பட்ட கதாபாத்திர அமைப்பு சுத்தமாக ஒட்டவில்லை. மற்ற கடவுள்கள் பலகீனமானவை என்று கூறி, அதற்கான காரணத்தை ஆசிஃபா அடுக்கியதும் ‘ஆமால்ல...’ என மற்ற மாணவிகள் நம்புவதும், நரகத்திலிருந்து இஸ்லாம் மட்டுமே காக்கும் என்பதையும், மொபைல் போன் பயன்படுத்துவது பாவம் என எதைச் சொன்னாலும் நர்ஸிங் படிக்கும் மாணவிகள் உடனே நம்பி மயங்கிவிடுவது இந்தியாவில் அதிக கல்வியறிவு கொண்ட கேரளாவில் எந்த அளவுக்கு சாத்தியம் என்பது விவாதத்துக்குரியது. குறிப்பாக, முதன்மை கதாபாத்திரமான ஷாலினி கதாபாத்திரம், சக மாணவி ஆசிஃபா சொல்வதையும் நம்புகிறார், அடுத்து மத குருமார் சொல்வதையும் நம்புகிறார், அடுத்து இஸ்லாமிய ஆண் ஒருவர் சொல்வதையும் நம்புகிறார். ‘ரோபோ’வுக்கு புரோகிராம் செய்வதைக் காட்டிலும் எளிதாக ஷாலினியை புரோகிராம் செய்துவிடலாம்போல.
நர்ஸிங் படிக்கும் அளவிற்கான தெளிவு, சிரியாவில் மாட்டிக்கொள்ளும்போது அங்கிருந்த எல்லைகளை கணிக்கும் திறன் கொண்ட மாணவியின் இந்த ‘புரோகிராமிங்’ மூளை திரைப் பலவீனம். அதிலும் ஹிஜாப்பின் முக்கியத்துவதை விளக்குகிறேன் என்ற பெயரில் வைக்கப்பட்ட ஷாப்பிங் மால் காட்சி அப்பட்டமான திணிப்பு.
இந்தியில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் கேரளாவில் உள்ள அனைவரும் இந்தியில் பேசுவது ஏதோ ஒரிஜினல் வெர்ஷன் படத்தையே இந்தியில் டப் செய்து பார்க்கும் உணர்வை கொடுக்கிறது. இப்படியாக நம்மை திரையிலிருந்து விலக்கும் காட்சிகள் ஒருபுறமிருக்க, படத்தின் இரண்டாம் பாதி அழுகையையும், பரிவையையும், ஒரு தரப்பின் மீதான வெறுப்பையையும் உமிழ ‘நாடக’த்தன்மையுடன் சித்தரித்திருப்பது பெரும் அயற்சி.
குறிப்பாக ‘காஷ்மீருக்கு விடுதலை வேண்டும்’, ‘தேசியவாதம் ஹராம்... இஸ்லாம்தான் அடையாளம்’ போன்ற பிரிவினைக் கருத்துகளை கேரள இஸ்லாமியர்கள் வீடுகளில் எழுதி வைத்திருப்பது, லிப்ஸ்டிக் போட்டதற்காக பெண்ணின் கைகளை கொடூரமாக வெட்டுவது, இறுதியில் ஹிஜாபை தீயிலிட்டு எரிப்பதுதான் ‘விடுதலை’ என்பதை முன்வைப்பது, தொடர்ந்து இஸ்லாமியர் ஒருவர் மற்ற கடவுள்களை விமர்சிப்பது, ஹிஜாப்பில் தூக்கு மாட்டிக்கொள்வது என படம் முழுக்க வெறுப்பு மட்டுமே நோக்கமாக கொண்டிருப்பதன் மூலம் பிரசாரம் மட்டுமே மேலோங்குகிறது.
கம்யூனிஸ்ட் அப்பாவிடம், பாதிக்கப்பட்டு திரும்ப வந்த அவரது மகள், ‘நாத்திகம், கம்யூனிசம் சொல்லிக் கொடுத்தற்கு பதில் நம் மதத்தின் பெருமையைச் சொல்லிக் கொடுத்திருக்கலாம்’ என்ற வசனத்துக்கான தேவையையும் புரிந்துகொள்ள முடியவில்லை.
இதையெல்லாம் கடந்து ஷாலினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆதார ஷர்மா தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். யோகிதா பிகானி, சோனியா பலானி, சித்தி இத்னானி மூவரும் நடிப்பில் ஸ்கோர் செய்கின்றனர். தேவ தர்ஷினி, பிரணாவ் மிஷ்ரா உள்ளிட்ட பலர் தேவையான நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள். ஆஃப்கானிஸ்தான் என காட்டப்படும் நிலப்பரப்பையும் அதன் வெம்மையையும் பிரசாந்த் தன் கேமரா மூலம் காட்சிப்படுத்தியிருந்த விதம் கவனம் பெறுகிறது. விரேஷ் ஸ்ரீவல்சா, பிஷக் ஜோதியின் பின்னணி இசை பரிவைக் கோரும் இடங்கள் சீரியல் தன்மை.
மொத்தத்தில் படம் சுவாரஸ்யமாகவோ, சினிமாட்டிக் எக்ஸ்பீரியன்சாகவோ இல்லாமல் பலமான பிரச்சாரக் காட்சிகளுடனும் நமக்கு ஒட்டாத திரைக்கதையுடன் இருப்பது மொத்த படத்தின் நோக்கத்தையும் வெளிச்சமிட்டு சினிமா ரசிகர்களை திரையிலிருந்து விலக்கிவைப்பது பெரும் அயற்சி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT