Published : 04 May 2023 08:35 AM
Last Updated : 04 May 2023 08:35 AM

நடிகரும் இயக்குநருமான மனோபாலா கடந்து வந்த பாதை

மனோபாலா

பிரபல நடிகரும் இயக்குநருமான மனோபாலா காலமானார். அவருக்கு வயது 69.

கடந்த ஜனவரி மாதம் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அதற்காக ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் அவருக்கு கல்லீரல் பிரச்சினை ஏற்பட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்ற அவர், கடந்த சில நாட்களாக தனது வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென மரணமடைந்தார்.

அவர் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள், திரையுலகினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச் சடங்கு இன்று காலை நடக்கிறது. மனோபாலாவின் மறைவு ரசிகர்களையும் திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மறைந்த மனோபாலாவுக்கு உஷா என்ற மனைவி ஹரீஷ் என்ற மகன் உள்ளனர்.

பாரதிராஜாவிடம் ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் உதவி இயக்குநராகச் சேர்ந்த மனோபாலா, கார்த்திக் நடித்த ‘ஆகாய கங்கை’ படம் மூலம் இயக்குநர் ஆனார். 1982ம் ஆண்டு வெளியான இந்தப் படம் சரியான வரவேற்பைப் பெறவில்லை. தொடர்ந்து மோகன் நடிப்பில் ‘பிள்ளை நிலா’ படத்தை இயக்கினார். இது வெற்றிபெற்றது. அடுத்த ‘சிறைப்பறவை’, ரஜினி நடித்த ‘ஊர்க்காவலன்’, விஜயகாந்த் நடித்த ‘என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்’, சத்யராஜ் நடித்த ‘மல்லுவேட்டி மைனர்’, ஜெயராம் நடித்த ‘நைனா’ உட்பட 24 படங்களை இயக்கியுள்ளார். ‘சதுரங்கவேட்டை’, ‘பாம்புச் சட்டை’, ‘சதுரங்கவேட்டை 2’ படங்களைத் தயாரித்துள்ளார்.

300-க்கும் அதிகமான திரைப்படங்களில் காமெடி, குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் சிறிய வேடங்களில் தலைகாட்டி வந்த அவர், கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய ‘நட்புக்காக’ படத்துக்குப் பிறகு முழு நேர நடிகரானார். பிதாமகன், பாய்ஸ், காதல் கிறுக்கன், பேரழகன், கஜினி, தலைநகரம், இம்சை அரசன் 23ம் புலிகேசி, சந்திரமுகி, கலகலப்பு உட்பட பல படங்களில் அவர் நடிப்பு பேசப்பட்டது.

சிவாஜி, ரஜினியில் தொடங்கி இன்றைய இளம் தலைமுறை நடிகர்களுடனும் நடித்துள்ளார். சில சின்னத்திரைத் தொடர்களை இயக்கியுள்ள அவர், அதிலும் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாக யூடியூப்பிலும் பிரபலங்களை பேட்டி எடுத்து வந்தார்.

மறைந்த மனோபாலாவின் உடலுக்கு ஒளிப்பதிவாளர் பி.சி.ராம், நடிகர்கள் சிவகுமார், விஜய், சித்தார்த், நட்டி என்கிற நட்ராஜ், ஆர்யா, இயக்குநர்கள் சந்தானபாரதி, மணிரத்னம், விக்ரமன், ஏ.ஆர்.முருகதாஸ், ஹெச்.வினோத், சுசீந்திரன், விஜய், மோகன், தாமு, மோகன்ராம், ஆர்.கே.செல்வமணி, கே.எஸ்.ரவிகுமார் உட்பட ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x