Published : 03 May 2023 10:36 AM
Last Updated : 03 May 2023 10:36 AM
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால் ஆர்.கே.சுரேஷின் வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் முடக்கியுள்ளனர்.
சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு ஆருத்ரா கோல்டு என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஓபிசி பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பு உள்ளது தெரியவந்தது. இந்த வழக்கில் வெளிநாடு தப்பிச் சென்ற நடிகர் ஆர்.கே.சுரேஷ் உட்பட 4 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெளிநாடு தப்பிச் சென்ற ஆர்.கே.சுரேஷின் வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் முடக்கியுள்ளனர். விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT