Published : 02 May 2023 06:32 PM
Last Updated : 02 May 2023 06:32 PM
“இந்தியாவில் எந்தப் பிரச்சினையும் இல்லை” என மகராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார். ‘இந்தியாவில்தான் பிர்ச்சினை. துபாயில் நான் பாதுகாப்பாக இருக்கிறேன்’ என்று சல்மான் கான் கூறியிருந்ததற்கு அவர் பதிலளித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மர்ம நபர் ஒருவரிடமிருந்து தொடர் கொலை மிரட்டல் வந்து கொண்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு மும்பை காவல் துறை சார்பாக ஒய் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் மும்பை போலீசாரின் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ராஜஸ்தானிலிருந்து அழைத்த மர்ம நபர் ஒருவர், தன் பெயர் ராக்கி பாய் எனவும், விரைவில் சல்மான் கானை கொல்லப்போவதாகவும் மிரட்டல் விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து சல்மான் கானுக்கு பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட்டது.
அண்மையில் தனக்கு வந்த கொலை மிரட்டல்கள் தொடர்பாக துபாயில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த சல்மான் கான், “இங்கே (துபாய்) நான் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன். எனக்கு இங்கு எந்தப் பிரச்சினையுமில்லை. இந்தியாவில்தான் எனக்கு பிரச்சினை. இந்தியாவில் நான் மிகவும் கவனத்துடன் ஒவ்வொன்றையும் செய்ய வேண்டியுள்ளது” என்று பேசியிருந்தார்.
இந்நிலையில், சல்மான்கானின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், “சல்மான் கானுக்கு மும்பையிலோ, இந்தியாவின் மற்ற எந்த பகுதியிலோ எந்த பிரச்சினையுமில்லை. அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மும்பை மிகவும் பாதுகாப்பான நகரம். அவர் கவலைப்பட தேவையில்லை” என தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசியிருந்த நடிகை கங்கனா ரனாவத், “நாங்களெல்லாம் நடிகர்கள். சல்மான் கானுக்கு மத்திய அரசு பாதுகாப்பு கொடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரிடமிருந்து அவருக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளதால் அவர் எதற்கும் பயப்படத் தேவையில்லை. எனக்கு மிரட்டல் வந்தபோது கூட மத்திய அரசு எனக்கு பாதுகாப்பு வழங்கியது. இன்று நாடு பாதுகாப்பான கைகளில் உள்ளது. நாம் எதற்கும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை’ என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT