Published : 01 May 2023 06:01 PM
Last Updated : 01 May 2023 06:01 PM

ரஜினிகாந்த்தை இழிவுபடுத்துவதா? - ரோஜாவுக்கு சந்திரபாபு நாயுடு கண்டனம்

உலக அளவில் நேசிக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த்தை இழிவுபடுத்தும் ஒய்எஸ்ஆர் கும்பலுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தெலுங்கு தேச கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் என்டிஆரின் நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். இதில் பேசிய அவர், “சந்திரபாபு நாயுடு ஒரு தீர்க்கதரிசி. தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசியல் தலைவர். அவருடைய தொலைநோக்குப் பார்வை காரணமாகவே ஹைதராபாத் இப்போது ஹைடெக் சிட்டியாக; நியூயார்க் நகரம் போல் அபிவிருத்தி அடைந்துள்ளது” என்று கூறினார்.

ரஜினியின் இந்த பேச்சுக்கு பதிலளித்துள்ள ஆந்திர சுற்றுலாத் துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா, “ரஜினிகாந்த்தின் நேற்றைய பேச்சு சிரிப்பை வரவழைக்கும் வகையில் உள்ளது. ஒரு நடிகராக ரஜினி மீது மிகுந்த மரியாதை உள்ளது. ஆனால், அவருக்கு ஆந்திரப்பிரதேச அரசியல் குறித்து எதுவும் தெரியவில்லை. விஷன் 2020, 2047 என்று தொலைநோக்கு பார்வையில் சிந்திக்கும் தலைவர் சந்திரபாபு நாயுடு என ரஜினி குறிப்பிட்டுள்ளார். சந்திரபாபுவின் விஷன் 2020 காரணமாக தெலுங்கு தேசம் கட்சிக்கு 23 இடங்கள் கிடைத்தன. இப்படியிருக்கும்போது 2047-ல் அவர் எங்கே இருப்பார் என்று யாருக்கும் தெரியாது” என்று ரோஜா கிண்டலாக பேசினார்.

இந்நிலையில் ரோஜாவின் இந்த கருத்துக்கு சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “புகழ்பெற்ற நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு எதிராக இழிவான கருத்துக்களைத் தெரிவித்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை வன்மையாகக் கண்டிக்கின்றேன். நேர்மை, ஒழுக்கம், மனிதநேயத்தின் உருவகமாகத் திகழ்பவர் ரஜினிகாந்த். நல்லுள்ளம் படைத்த அவர் நாடு கடந்து உலக அளவில் எல்லோராலும் நேசிக்கப்படுகிறார். அவர் மீது கட்டவிழ்க்கப்பட்ட வக்கிரமான ஒய்எஸ்ஆர் கும்பலின் இந்த திட்டமிட்ட தாக்குதல், அவர்கள் மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்து வருவதைக் காட்டுகிறது. மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x