Published : 20 Apr 2023 03:41 PM
Last Updated : 20 Apr 2023 03:41 PM

இஸ்லாமியர் இறை நம்பிக்கை, குரானை இழிவுபடுத்தும் ‘புர்கா’ படத்தை தடை செய்க: சீமான்

சென்னை: "இஸ்லாமிய பெருமக்களின் இறை நம்பிக்கையையும், அவர்களின் புனித நூலான குரானையும் இழிப்படுத்தும் வகையில், ஓடிடி இணையதளத்தில் வெளியாகியுள்ள ‘புர்கா’ திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நபி பெருமானாரின் நன்மொழிகளால் தொகுக்கப்பட்டு இஸ்லாமியர்கள் பின்பற்றும் ஷரியத் சட்டம் பெண்களுக்குச் சம உரிமை வழங்குவதில் பல முற்போக்கான கருத்துக்களை வலியுறுத்தும் நிலையில், இஸ்லாம் மார்க்கமே பெண்களுக்கு எதிரானது போல் ‘புர்கா’ திரைப்படம் சித்தரிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

இந்திய பெருநாட்டில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு மதவாத சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்து, அவர்களின் கொடுங்கரங்களில் அதிகாரம் சிக்கியுள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட சமய மக்களை ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரானவர்கள் போலக் காட்டமுனைவது கடுமையான எதிர் விளைவுகளை ஏற்படுத்தவே வழிவகுக்கும்.

நாட்டின் ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் எவ்வித தீங்கும் ஏற்படாத வண்ணம் படைப்பாளிகள் தங்களின் கடமையை உணர்ந்து, மிகுந்த பொறுப்புணர்வுடன் தங்களது படைப்புகளை வெளிக்கொணர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அதோடு குறிப்பிட்ட மக்களின் நம்பிக்கைகளை இழிவுப்படுத்தி, அவர்களின் உணர்வுகளைச் சீண்டி, பதற்றமான சூழலை உருவாக்கும் படைப்புகளைப் புறக்கணிக்க வேண்டுமென திரைக்கலை ரசிகர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

தற்போது ‘ஆகா’ ஓடிடி இணையதளத்தில் வெளியாகியுள்ள ‘புர்கா’ திரைப்படம் இசுலாமிய பெருமக்களின் இறை நம்பிக்கையையும், அவர்களின் புனித நூலான குரானையும் இழிப்படுத்துவதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்து அதனைத் தடைசெய்யக் கோரும் இசுலாமிய மக்களின் கோரிக்கையை இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் விரைந்து கவனத்தில் எடுக்க வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் நாம் தமிழர் கட்சி மக்களைத் திரட்டி போராடும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x