Published : 09 Apr 2023 06:49 AM
Last Updated : 09 Apr 2023 06:49 AM

ஆகஸ்ட் 16 1947: திரை விமர்சனம்

திருநெல்வேலியை அடுத்துள்ள செங்காடு கிராமத்தில் உயர்தரப் பருத்தி கிடைக்கிறது. பிரிட்டிஷ் அதிகாரி ராபர்ட் கிளைவ் (ரிச்சர்ட் ஆஷ்டன்) கிராமத்தினரிடம் தினமும் 16 மணிநேரம் வேலைவாங்கி பருத்தி வியாபாரத்தில் பெரும் லாபம் சம்பாதித்துக்கொடுக்கிறார்.

ராபர்ட்டின் மகன் ஜஸ்டின் (ஜேசன் ஷா) பெண்களை பாலியல் வேட்கைக்குப் பயன்படுத்திக்கொள்கிறார். சிறுவயதிலேயே பெற்றோறை இழந்த பரமன் (கவுதம் கார்த்திக்) ஒதுக்கப்பட்டவனாக வாழ்ந்துவருகிறார். பிரிட்டிஷ் அதிகாரிக்குத் துணைபோகும் ஜமீன்தார் (மதுசூதன் ராவ்), ஜஸ்டினுக்குப் பயந்து தனது மகள் தீபாலியை (ரேவதி) வீட்டுக்குள் பூட்டிவைத்து வளர்க்கிறார். பரமன் அவளை ரகசியமாகச் சந்தித்து காதலிக்கத் தொடங்குகிறார்.

இச்சூழலில் நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கிறது. இத்தகவலை செங்காடு மக்களுக்குத் தெரியவிடாமல் தடுக்கிறார் ராபர்ட். தீபாலியைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஜஸ்டின், அவளை அடைய துடிக்கிறார். தன் காதலியைக் காப்பாற்ற பரமன் எடுக்கும் முயற்சிகள் வெற்றிபெற்றதா? செங்காடு மக்களுக்கு ராபர்ட்டின் கொடுமையில் இருந்து சுதந்திரம் கிடைத்ததா? என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது மீதிக் கதை.

பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் கொடுங்கோன்மையை, அந்த அதிகாரிகளின் கொடூர முகத்தைக் காட்சிப்படுத்தும் கதையைத் தேர்ந்தெடுத்ததற்காகவே இயக்குநர் என்.எஸ்.பொன்குமரனைப் பாராட்டலாம். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின் தென்தமிழக கிராமத்தை, அங்கு வாழ்ந்த மக்களை கண்முன் கொண்டுவர கலை இயக்குநர், ஆடை வடிவமைப்பாளர் ஆகியோரின் துணையுடனும் கிராம மக்களின் வெள்ளந்தித்தனத்தை வெளிப்படுத்தும் கதாபாத்திர வடிவமைப்பை வசனங்கள் மூலமாகவும் கண் முன் நிறுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

தொடக்கக் காட்சிகள் கதையின் சூழலை அழுத்தமாகப் பதிவு செய்கின்றன. ஒரு கட்டத்துக்கு மேல் இது அடிமை மக்களை மீட்கும் கதையா? காதல் கதையாஎன்னும் குழப்பம் மேலோங்கத் தொடங்கிவிடுகிறது. நாயகனின் முன் கதையைச்சொல்லும் காட்சிகளும் நாயகனுக்கும் நாயகிக்கும் இடையிலான காட்சிகளும் தேவைக்கதிகமான நேரத்தை எடுத்துக்கொள்கின்றன.

சுதந்திரம் கிடைத்த தகவல் செங்காடு மக்களைச் சென்றடைந்துவிடாமல் தடுக்கப்படும் விதம் வலுவானதாக இல்லை.இறுதிக் காட்சி வழக்கமான சினிமாத்தனத்துடன் நிறைவடைகிறது. பிரிட்டிஷ் ஆட்சிஅகன்று மக்களை அடிமைப்படுத்தும் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றக் காத்திருக்கும் ஜமீன்தார்களின் பேராசை ஒரு காட்சியில் நுட்பமாக வெளிப்படுகிறது. அது அதற்கு மேல் வளர்த்தெடுக்கப்படாதது ஏமாற்றம்.

கவுதம் கார்த்திக், அறிமுக நடிகை ரேவதி கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி நடித்திருக்கிறார்கள். புகழ், சென்டிமென்ட் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். மதுசூதன் ராவ், ரிச்சர்ட் ஆஷ்டன்இருவரும் வில்லத்தனத்தை குறையின்றிச் செய்கிறார்கள். ஷான் ரோல்டனின் பின்னணி இசை காட்சிகளின் உணர்வுகளை அழுத்தமாகக் கடத்த உதவியிருக்கிறது. பாடல்களும் ரசிக்கும்படி உள்ளன. ஒளிப்பதிவாளர் செல்வகுமார் எஸ்.கே, பீரியட் படத்தின் கதைக் களத்தைக் கண்முன் கொண்டு வந்திருக்கிறார்.

அப்பாவி கிராமத்து மக்களின் அடிமைச் சங்கிலிகள் அறுபடும் கதைக்கு இன்னும் நேர்த்தியான திரைக்கதை அமைத்திருந்தால் ‘ஆகஸ்ட் 16 1947’ முக்கியமான ‘பீரியட் சினிமா’ ஆகியிருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x