Published : 07 Apr 2023 03:23 PM
Last Updated : 07 Apr 2023 03:23 PM
சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவின் செங்காடு கிராமத்தை ஆட்சி செய்து வரும் ஆங்கிலேயரான ராபர்ட் கிளைவ் (ரிச்சர் ஆஸ்டன்) அங்கிருக்கும் மக்களை கொடூரமாக சித்ரவதை செய்து வேலை வாங்குகிறார். அவரது மகன் ஜஸ்டின் (ஜேசன் ஷா) அக்கிராமத்தில் பருவமடைந்த பெண்களை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். அவருக்கு பயந்து அவ்வூர் ஜமீன்தார் தனது மகள் இறந்துவிட்டதாக பொய் சொல்லி வீட்டில் வைத்து வளர்க்க, ஒருநாள் உண்மை வெளிச்சமாகிறது. இதைக் கண்ட ஜஸ்டின், ஜமீன்தார் மகளை அடைய நினைக்க, தனது காதலியான அந்தப் பெண்ணை பாதுகாக்க போராடுகிறார் பரமன் (கௌதம் கார்த்திக்). இறுதியில் பரமன் அந்தப் பெண்ணை காப்பாற்றினாரா? இல்லையா? கிராம மக்களுக்கு சுதந்திரம் கிடைத்த செய்தியை எதற்காக, யார் மறைத்தார்கள்? இதுதான் படத்தின் திரைக்கதை.
வெயில் மனிதர்களின் பழுப்பேறிய முகங்களையும், சுடுமண் தரையின் சூட்டோடு கொதிக்கும் நீரில் தூக்கி வீசப்படும் அவலத்தையும், எதிர்த்து எழும் குரல்கள் இரக்கமற்று கழுவேற்றப்படும் நிகழ்வுகளின் வழியே பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இந்தியாவின் நிலையை கற்பனைக் கலந்து காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் என்.எஸ்.பொன்குமார். யதார்த்தத்திற்கு நெருக்கமான மறைந்த கலை இயக்குநர் டி.சந்தானத்தின் கலை அமைப்பு உண்மையான கிராமத்தை கண்முன் நிறுத்துகிறது. சிகை அலங்காரத்தின் மிகையற்ற தன்மை கிராமத்து மக்களின் சாயலை வரித்துக்கொள்வதால், செங்காடு மக்களுடன் திரையில் உறவாடும் உணர்வு எழுவது ஆகச் சிறப்பு. குறிப்பாக டிஎஸ்ஆர் தர்மராஜ் காதில் பூட்டு போன்ற காதணி ஒன்றை அணிந்திருக்கும் காட்சி பீரியாடிக் படத்திற்கான அத்தாட்சி.
அழுத்தமான காட்சிகளுடன் தொடங்கும் படத்தில் நடுவில் வரும் காதலும் அதற்கான பாடல்களும் சோர்வு. நாயகனுக்கான பின்கதை சம்பிரதாயத்துடன் அணுகப்பட்டிருப்பது அதற்கான உணர்வை நீர்த்துப்போகச் செய்வதால் அந்த ஃப்ளாஷ்பேக் காட்சிகளின் தாக்கம் உணர்வுகளில் பிரதிபலிக்கவில்லை. அதேபோல, இறுதிக்காட்சியின் நீளம் அக்கிராமத்தின் பரப்பளவை விட நீண்டிருப்பதாலும், இதுதான் நடக்கப்போகிறது என்பதை காலம் காலமாக தமிழ் சினிமா பார்த்தவர்களால் எளிதாக கணிக்க முடிவதாலும் முடிவு அவ்வளவு நேர்த்தியாக கையாளப்படவில்லையோ எனத் தோன்றுகிறது.
‘கொட்டுங்கடா’ பாடலில் தெறிக்கும் புழுதியால் ஏசி திரையரங்கிலும் கண்களில் தூசு தட்டுவது ஒளிப்பதிவாளர் செல்வகுமாரின் லென்ஸ் செய்யும் மாயம். அழகியலை கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து பேசும் இரவுக் காட்சியில் சுற்றியிருக்கும் தீப்பந்தத்தின் ஒளியை உள்வாங்கி ப்ரேமை செதுக்கியிருக்கும் விதம் ஒளிப்பதிவில் இதம் சேர்க்கிறது. ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் மனதில் தேங்கவில்லை என்றாலும், பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. இறுதியில் வரும் ‘வந்தே மாதரம்’ ஈர்ப்பு.
இயல்பு கலந்து நேர்த்தியான நடிப்பும் அதற்கான கௌதம் கார்த்தியின் உழைப்பும் திரையில் கவனம் பெறுகிறது. கிராமத்து மக்களில் ஒருவராகவும், அதற்கான உடல்மொழியும், சிகை அலங்காரமும், இறுதிக்காட்சியில் மக்கள் முன் அவர் பேசும் வசனமும், காதலிக்காக எந்த எல்லைக்கும் செல்லும் கதாபாத்திரத்தில் ‘பக்காவாக’ பொருந்துகிறார். இதுவரை பார்த்திடாத அழுத்தமான நடிப்பில் புகழ் அதகளம் செய்கிறார். பிரிட்டிஷ் அதிகாரி ராபர்ட் க்ளைவிடம் நடுங்கிக் கொண்டே பேசும் காட்சியிலும், கௌதம் கார்த்தியிடம் ஓடி வந்து ஒரு விஷயத்தை பகிரும் காட்சியிலும் தேர்ந்த நடிகராக மிளிர்கிறார்.
அப்பாவி முகத்துடன் ஜமீன்தார் வீட்டுப்பெண்ணாக ரேவதியின் நடிப்பு கதாபாத்திரத்திற்கு பொருந்துகிறது. அதேசமயம் நடிப்பின் தேவையை சில காட்சிகள் அப்பட்டமாக்கிவிடுகின்றன. பிரிட்டிஷ்காரராக நடித்துள்ள ரிச்சர்ட் ஆஸ்டன் அட்டகாசமான நடிப்பில் கதாபாத்திரத்திற்கு தேவையான வெறுப்பை வாரிக்குவிக்கிறார். மகனாக வரும் ஜேசன் ஷா பொம்மையை போல இருந்தாலும் குறை சொல்ல முடியாத நடிப்பு. ஊர் மக்களின் நடிப்பில் அவ்வளவு யதார்த்தம்.
மொத்தத்தில், சுதந்திரம் கிடைத்தது குறித்து அறியாத கிராமம் என்ற சுவாரஸ்யமான ஒன்லைனை அழுத்தமாக எழுதிய காட்சிகள் நிறைவு. தேவைக்கு அதிகமாக இழுத்த காதல், க்ளைமாக்ஸ் உள்ளிட்ட இன்னும் சில காட்சிகள் ஏமாற்றம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT