Published : 30 Mar 2023 06:56 PM
Last Updated : 30 Mar 2023 06:56 PM

“மணிரத்னம் இக்கதைக்கு ஒத்துவரமாட்டார் என்றேன். ஆனால்...’’ - துரைமுருகன் பகிர்வு

“மணிரத்னம் இந்தக் கதைக்கு ஒத்துவரமாட்டார் வேண்டாம் என்றேன்” என அமைச்சர் துரைமுருகன் ‘பொன்னியின் செல்வன் 2’ இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.

மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன், “ஒரு வரலாற்று கதையை வரலாற்றில் நிற்கும் அளவில் படமாக்கிய அனைவருக்கும் நன்றி. நான் படிக்கின்ற காலத்தில் பொன்னியின் செல்வன் நாவலை 5 முறை படித்திருக்கிறேன்.

இக்கதையை படமாக்குவதாக சுபாஷ்கரன் என்னிடம் கூறினார். நான் கதையை படித்தீர்களா என்று கேட்டதற்கு அவர் இல்லை என்றார். அப்போது, இப்படத்தை நீங்கள் எடுக்க வேண்டாம் என்றேன். அவர் எடுத்தே தீருவேன் என்றார். கதைகளை படமாக்குவது எளிது, காவியங்களை படமாக்குவது கடினம் என்று கூறினேன். யார் நடிக்கிறார்கள் என்று கேட்டேன். அரைமனதாக ஒப்புக்கொண்டேன். இயக்குநர் யார் என்று கேட்டேன். மணிரத்னம் என்றார். அவர் இருட்டிலேயே படம் எடுப்பவர் இக்கதைக்கு ஒத்துவரமாட்டார் வேண்டாம் என்றேன். ஆனால், படத்தை பார்த்துவிட்டு அந்த எண்ணத்தை மாற்றிவிட்டேன். வீட்டில் இருந்தே சல்யூட் வைத்தேன்.

வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி சிறப்பாக நடித்துள்ளார். எனது தொகுதிக்குட்பட்ட ஊர்தான் வந்தியத்தேவனின் ஊர்‌. அதனால் எனக்கு ஒரு மகிழ்ச்சி. கமல்ஹாசனுக்கு கருணாநிதி கலைஞானி என பெயரிட்டார். அவருக்கு இணையானவர் திரையுலகில் இன்றைக்கு இல்லை. என்றைக்கும் இல்லை. எனது பேச்சைக் கேட்காமல் இப்படத்தை எடுத்து வெற்றி கண்ட சுபாஷ்கரனுக்கு வாழ்த்துகள். ஒரு படத்தின்‌ மூலம் ஒரு தமிழ் மன்னனை அறிமுகப்படுத்திய‌ பெருமை சுபாஷ்கரனை சேரும். முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் இரண்டு மடங்கு ஓடும். வாழ்த்துக்கள்” என்றார்.

பாரதிராஜா பேசுகையில், “நான் 9-ம் வகுப்பு படிக்கும்போது பொன்னியின் செல்வன் படித்தேன். எந்த படம் வேண்டுமானலும் எடுக்கலாம்.‌ ஆனால், சரித்திர கதையை பிசகாமல் எடுக்கணும். மணிரத்னம் ஜீனியஸ். இப்படத்தை எம்ஜிஆர் எடுக்க ஆசைப்பட்டார். கமல், ஸ்ரீ தேவி, என்னை வைத்து எம்ஜிஆர் பேசினார். வந்தியத்தேவனாக கமலை வைத்து எடுக்க நினைத்தார். ஆனால், அதன் பிறகு எம்ஜிஆருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நான் சொதப்பிவிடுவேன் என்று கடவுள் மணிரத்னத்தை எடுக்க வைத்துவிட்டார்.

நாம் நிறை கொடுத்துவைத்தவர்கள். நம்மிடம்‌ நிறைய கலைஞர்கள் உள்ளனர். காதல் இல்லாமல் நாம் கலைஞர்கள் கிடையாது. காதல் ஒன்றுதான் கலைஞனை வளர்க்கிறது. மணிரத்னம் ரொமான்டிக் என்று வெளியே சொல்வது இல்லை. கமல் சொல்லி விடுவார். இப்படத்தில் கதாநாயகிகளை லட்டு லட்டாக தேர்வு செய்துள்ளார். எல்லோரையும் காதலிக்கலாம் போல. நந்தினியை, குந்தவையை, பூங்குழலியை காதலிக்கலாம். உலகம் முழுவதும் இன்று பொன்னியின் செல்வன் பற்றி விவாதிக்கின்றனர். இந்தியாவை தமிழ்நாடு பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் மணிரத்னம். நான் கடைசிவரை கடவுளிடம் போராடி மணிரத்னம் செய்வதை பார்த்துவிட்டுதான் போவேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x