Published : 20 Mar 2023 06:23 AM
Last Updated : 20 Mar 2023 06:23 AM

சினிமா எடுப்பது கத்தி மேல் நடப்பது போல! - அமைச்சர் துரைமுருகன் கருத்து

துபாயில் நடந்த ‘இராவண கோட்டம்’ இசை வெளியீட்டு விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசினார். உடன், தயாரிப்பாளர் கண்ணன் ரவி, ஐசரி கணேஷ், சுபாஸ்கரன், எம்.பி.க்கள் கனிமொழி சோமு, கலாநிதி ஆகியோர்.

சாந்தனு பாக்யராஜ், ஆனந்தி,பிரபு உட்பட பலர் நடித்துள்ள படம், ‘இராவண கோட்டம்’. இப்படத்தை ‘மதயானைக் கூட்டம்' விக்ரம் சுகுமாறன் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். ஏகாதசி, கார்த்திக் நேத்தாஆகியோர் பாடல் எழுதியுள்ளனர்.துபாயில் வசிக்கும் திட்டக்குடி கண்ணன் ரவி தயாரித்துள்ளார் இப்படம் மே 12-ல் வெளியாகிறது.

இந்நிலையில், துபாயில் இதன்இசை வெளியீட்டு விழா கடந்த18-ம் தேதி நடந்தது. அமைச்சர்துரைமுருகன், லைகா நிறுவனர்சுபாஸ்கரன் இணைந்து பாடல்களை வெளியிட்டனர்.

அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: தமிழ் மொழி, இலக்கியம், போர்கள், சேர, சோழ, பாண்டியர்கள் பற்றி நாங்கள் மேடைதோறும் பேசி இருக்கிறோம். கேட்டவர்களுக்கு மட்டுமே அது புரியும்.

ஆனால், எங்கோ வயலில் வேலை பார்க்கிறவர்கள், மாடு மேய்ப்பவர்களுக்கும் ராஜராஜ சோழனையோ, ராஜேந்திர சோழனையோ தெரியாது. அவர்களுக்கு எல்லாம் ‘பொன்னியின் செல்வன்' யாரென தெரிய வைத்த மகத்தான சரித்திர புருஷர் சுபாஸ்கரன்.

அவர் என்னிடம், ‘பொன்னியின் செல்வன்' கதையை படமாக்குகிறேன் என்றார். அந்த கதையை நான் பத்து முறை படித்தவன். அதனால், ‘‘அது சினிமாவுக்கு சரிப்பட்டு வராது, வேறு கதையை எடுங்கள்'’ என்றேன். அவர், ‘‘பரவாயில்லசார், தமிழுக்காக இந்த படத்தைதயாரிக்கிறேன்'’ என்றார். அது தமிழுக்கான படம், தமிழர்களுக்கானபடமாக மாறியதில் மகிழ்ச்சி. என் பேச்சை கேட்காமல் எடுத்ததால், படம் வெற்றி பெற்றது.

அதேபோலதான் இந்த படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவியிடமும், ‘‘உங்களுக்கு எதற்கு இந்த வேலை?'’ என்றேன். சினிமாவில் கதை சொல்பவர்கள், அப்படியே நூறு நாள் ஓடுவதுமாதிரியே சொல்வார்கள்.

சினிமா எடுப்பது கத்தி மேல்நடப்பது மாதிரி. சினிமாக்காரர்களோடு நான் வாழ்ந்திருக்கிறேன். என் தலைவர் சினிமாக்காரர். என்னை வளர்த்த எம்ஜிஆர் சினிமாக்காரர். ஆனால், நான் சினிமா எடுக்கவில்லை. சுபாஸ்கரன்போல இந்த படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவியும் என் பேச்சை கேட்காமல் இந்த படத்தை எடுத்திருக்கிறார். அதனால் இந்த படமும் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில், எம்.பி.க்கள் கலாநிதி,கனிமொழி சோமு, இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பார்த்திபன், வெங்கட் பிரபு, சுந்தர் சி, தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் சிவா,ஐசரி கணேஷ், சுரேஷ் காமாட்சி, நடிகர்கள் பிரசன்னா, சிவா, இளவரசு,சுப்பு பஞ்சு, ராதிகா, பூர்ணிமாபாக்யராஜ், குஷ்பு, மீனா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x