Published : 19 Mar 2023 04:27 AM
Last Updated : 19 Mar 2023 04:27 AM
உடனடியாக புதிய வீடு ஒன்றில் குடியேற வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் அருண்(உதயநிதி ஸ்டாலின்) ஒரு தரகர் மூலமாக சோமு (பிரசன்னா) என்பவன் தங்கியிருக்கும் வீட்டை பகிர்ந்துகொள்ள சம்மதிக்கிறான். அன்று இரவு, முன்பின் தெரியாத ஒரு பெண்ணுக்கு (பூமிகா) உதவுவதற்காக, அவளது காரை ஓட்டிச்சென்று அவளை வீட்டில் கொண்டுவிட்டு வருகிறான். காரை எடுத்துச் சென்றுவிட்டு அடுத்த நாள் கொண்டுவிடுமாறு அந்த பெண் சொல்கிறாள். ஆனால், அடுத்த நாள் அந்த காரின் பின்புறத்தில் அந்த பெண் பிணமாகக் கிடக்கிறாள். கொலைப் பழியில் இருந்து தப்பிப்பதற்காக அருணும், சோமுவும் செய்யும் காரியங்கள் அவர்களை இன்னொரு கொலைப்பழி உட்பட மேலும் பல சிக்கல்களில் சிக்க வைக்கின்றன. இறுதியில் அருண், சோமுவுக்கு என்ன ஆனது? இறந்த பெண் யார்? அவரை கொன்றது யார்? என பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது மீதி திரைக்கதை.
அருள்நிதி நடித்த ’இரவுக்கு ஆயிரம் கண்கள்’ திரைப்படம் மூலம் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான இயக்குநர் மு.மாறன் மீண்டும் அதே க்ரைம் த்ரில்லர் கதையுடன் களமிறங்கியிருக்கிறார். திடீரென நிகழும் கொலை, செய்யாத கொலைக்கான பழியில் நாயகன் சிக்கிக்கொள்வது, அடுத்தடுத்து மேலும் பல சிக்கல்களில் மாட்டிக்கொள்வது என மர்ம முடிச்சுகளை பின்னிக்கொண்டே செல்வது, இறுதியில் அந்த முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு, உண்மை வெளிப்படுவது என சவால்களும், சுவாரஸ்யத்துக்கான வாய்ப்புகளும் நிறைந்த திரைக்கதை பாணியை கையில் எடுத்திருக்கிறார் மாறன்.
நாயகனின் காதல், அதனால் அவனுக்கு ஏற்படும் பிரச்சினை எனகதையின் மைய சிக்கலில் நாயகன் சிக்கிக்கொள்வதற்கான சூழல் விரைவாக சொல்லப்பட்டுவிடுகிறது. இந்தகாட்சிகளில் புதிதாக எதுவும் இல்லை என்றாலும் அலுப்பில்லாமல் நகர்ந்துவிடுகின்றன. நாயகன் பிரச்சினையில் சிக்கிக்கொண்ட பிறகு சூடுபிடிக்கும் திரைக்கதை, அடுத்தடுத்து ஊகிக்க முடியாத திருப்பங்களுடன் அங்கங்கே சில லாஜிக் ஓட்டைகளை தாண்டி இடைவேளை வரை சுவாரஸ்யமாக நகர்கிறது. இரண்டாம் பாதியிலும் ஓரு கட்டம் வரைமர்மங்கள் நீடிக்கிறது. ஆனால் அந்த மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்படும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. பூமிகா கதாபாத்திரம் ஏன் இறந்தது என்பதற்கான காரணம், அந்த கதாபாத்திரத்தின் பின்னணி ஆகியவற்றை தெரிவிக்கும் ஃப்ளாஷ்பேக் காட்சிகள்பல திரைப்படங்களில் பார்த்து சலித்துவிட்டவையாக இருக்கின்றன. அதற்குபிந்தைய இறுதிப் பகுதியும் வழக்கமான மசாலா திரைப்படங்களின் பாணியிலேயே அமைந்துள்ளது.
கதாபாத்திரத்தை கச்சிதமாக உள்வாங்கி சரியான நடிப்பை தருகிறார் உதயநிதி ஸ்டாலின். சற்று எதிர்மறை அம்சங்கள் கொண்ட கதாபாத்திரத்தை வழக்கம்போல அனாயாசமாக செய்கிறார் பிரசன்னா. நீண்ட இடைவெளிக்குபிறகு, இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பூமிகாவும், சற்றே வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீகாந்தும் குறைசொல்ல முடியாத நடிப்பை தருகின்றனர். நாயகனின் நண்பராக தொடக்க காட்சிகளில் வந்துபோகும் சதீஷ், அங்கங்கே சிரிக்க வைக்க முயல்கிறார். நாயகனை காதலித்துவிட்டுப் போகும் வேலையை சரியாக செய்கிறார் ஆத்மிகா. அதேநேரம், ஜி.மாரிமுத்து, போன்ற திறமையான நடிகர்கள் வீணடிக்கப்பட்டுள்ளனர். சித்துகுமாரின் பின்னணி இசை பரவாயில்லை; பாடல்கள் அளவாகவே பயன்படுத்தப்பட்டிருப்பது ஆறுதல்.
மர்ம முடிச்சுகளால் ஒரு கட்டம் வரை திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்ற இயக்குநர், அந்த முடிச்சுகளை அவிழ்ப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், தரமான த்ரில்லர் படம் பார்த்த திருப்தி கிடைத்திருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT