Published : 09 Mar 2023 03:27 PM
Last Updated : 09 Mar 2023 03:27 PM
‘வாடிவாசல்’ படத்தைத் தொடர்ந்து ‘வட சென்னை 2’ படத்தின் பணிகள் தொடங்கும் என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விடுதலை பாகம் 1’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், “‘விடுதலை’ படத்தின் தொடக்கம் இளையராஜா தான். 45 நிமிடங்கள் படம் எடுத்து விட்டுதான் அவரிடம் காண்பித்தேன். அந்தக் காட்சிகளைப் பார்த்துவிட்டு ராஜா இசையமைத்த பாடல்தான் வழி நெடுக காட்டுமல்லி பாடல். இந்தப் பாடலுக்கு இசைமைக்கும்போதே, இந்தப் பாடலை நான் எழுதுகிறேன் என்று சொல்லிதான் எழுதினார்.
என் மனதில் இருந்த உணர்வை அவர் இசையாக்கினார். மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. அவர் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள் எனக்கு மிகப் பெரிய கற்றல். “நாங்கள் எல்லோருமே உங்கள் பாடல்களை கேட்டு வளர்ந்தவர்கள்தான். அந்த சந்தோஷத்தோடு உங்கள் இசையை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம்" என்றார். தொடர்ந்து அவர் பேசுகையில், ரசிகர்கள் ‘தலைவா’ என கூச்சலிட்டனர்.
அதற்கு அவர், “சில நாட்களுக்கு முன்புதான் கூறினேன். சினிமா நடிகர்களை ‘தலைவர்’ என சொல்வது ஏற்புடையதல்ல. நடிகர்களுக்கு அப்படியென்றால் இயக்குநர்களுக்கும் அப்படித்தான்” என்றார். தொடர்ந்து படம் குறித்து பேசிய அவர், “இந்தப் படம் முழுக்க, அனைத்து விஷயங்களிலும் மிகப் பெரிய சவால்கள் எனக்கு இருந்தன. அதை ஏற்றுக்கொண்ட படக்குழுவின் அனைவருக்கும் நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன். குறிப்பாக இப்படம் உடல்ரீதியாக சூரிக்கு மிகப் பெரிய சவாலான படம்.
படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி படமாக்கப்படும்போது சூரிக்கு காயம் ஏற்பட்டது. அத்தனை அர்ப்பணிப்புடன் சூரி படத்தில் நடித்தார். எனக்கு படப்பிடிப்பு தளத்தில் மிகவும் கோவம் வரும். அதனை பொறுத்துக்கொண்ட உதவி இயக்குநர்களிடம் நன்றியோடு சேர்த்து மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் படத்தை ரூ.4 கோடி பட்ஜெட்டில் முடிக்க நினைத்தேன். ஆனால் நினைத்ததை விட பட்ஜெட் எகிறி விட்டது.
விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை பாரதிராஜா தான் செய்ய வேண்டியதாக இருந்தது. அதன் பின் இந்த கதாபாத்திரத்துக்காக எனக்கு தோன்றியது விஜய் சேதுபதிதான். தொடக்கத்தில் அந்தப் பகுதியில் படத்தை எப்படி எடுப்பது என தெரியாமல் இருந்தது. சொல்லப் போனால் எனக்கும் அது ஆடிஷன் மாதிரி தான் இருந்தது. தொடக்கத்தில் 8 நாள் என ஆரம்பித்தது 65 நாள் விஜய் சேதுபதியை வைத்து படமாக்கினோம். முதல் பாகத்தை விட 2-ம் பாகத்தில் தான் அவருக்கான காட்சிகள் அதிகம் இருக்கும்.
இன்றைய இளம் நடிகர்களுக்கு விஜய் சேதுபதி ரோல்மாடலாக இருக்கிறார். மொத்த யூனிட்டையும் சிறப்பாக வைத்துக்கொள்ளக் கூடியவர். கம்போர்ட்டில் பழகிய நடிகர்களுக்கு ‘விடுதலை’ படத்தில் நடிப்பது எளிதானல்ல. மிகப் பெரிய சவால். அந்த பக்குவம் விஜய்சேதுபதியிடம் இருந்தது. இந்தப் படத்திற்கு பிறகு ‘வாடிவாசல்’ படத்தை இயக்குகிறேன். தொடர்ந்து ‘வட சென்னை 2’ படப்பணிகள் தொடங்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT