Published : 26 Feb 2023 07:24 AM
Last Updated : 26 Feb 2023 07:24 AM
நாகர்கோவில் சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாக இருக்கும் துரையின் (பாபி சிம்ஹா) அறையில் அடைக்கப்படுகிறார் சேது (ஹிருது ஹாரூன்). அதே அறைக்கு வந்து சேரும் சில்லறைத் திருடர் மருதுவும் (முனீஸ்காந்த்) இன்னும் சில கைதிகளும் அங்கிருந்து தப்பிக்க, சேது முன்மொழியும் திட்டத்துக்கு ஒத்துழைக்கிறார்கள். அவர்கள் தப்பித்தார்களா, இல்லையா? அவர்கள் சிறைக்கு வந்து சேர்ந்த குற்றப் பின்னணி என்ன என்பது கதை.
1994இல் வெளிவந்த ‘ஷஷாங்க் ரிடெம்ஷன்’ ஹாலிவுட் படத்தின் தாக்கத்தில் உருவாகி 2018-இல் வெளிவந்த மலையாளப் படம் ‘ஸ்வாதந்தர்யம் அர்த்தராத்திரியில்’ (நள்ளிரவில் சுதந்திரம்). அதில், தமிழுக்காக சில மாற்றங்கள் செய்து மறுஆக்கம் செய்திருக்கிறார் இயக்குநர் பிருந்தா.
முதன்மைக் கதாபாத்திரங்கள் எதற்காகச் சிறைக்கு வந்து சேர்ந்தார்கள் என்கிற பின்னணி, தப்பிச் செல்வதற்காக செய்யும் ரகசிய வேலைகள் ஆகிய இரண்டையும் இணைகோடாக விவரித்துச் செல்கிறது படம். பாடல்கள் இருந்தாலும் அவை முட்டுக் கட்டையாக இல்லாமல், எந்த இடத்திலும் இடை நிற்காமல் பயணிக்கிறது உற்சாகமூட்டும் திரைக்கதை.
சிறைக் கண்காணிப்பாளர், காவலர்களின் நன்மதிப்பைப் பெறுவது, துரையின் விடுதலை வேட்கையைத் தூண்டிவிட்டு, தப்பிக்கும் திட்டத்துக்குள் அவரை இழுத்து வருவது, முக்கிய ஆளாக இருந்துதிட்டத்தைச் செயல்படுத்துவது என சேது கதாபாத்திரம் வலிமையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால், சிறையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற சேதுவுடைய துடிப்பின் பின்னால், விடலைக் காதல் காரணமாக இருப்பது சறுக்கல்.
வாய்ப் பேச முடியாத பெண்ணாகக் காட்டப்படும் நாயகியை வெறும் ‘காதல் பண்ட’மாகச் சித்தரித்திருப்பதும் ஏமாற்றம்.
பெரும்பகுதி கதை நிகழும் களமான மாவட்டச் சிறைசாலை எப்படியிருக்கும் என்பதை ஏற்றுகொள்ளும் விதமாக, ‘செட்’என்றே தெரியாத வண்ணம் அமைத்திருக்கிறார் ஜோசப் நெல்லிக்கல். சிறைச் சாலையின் வெளித்தோற்றம், அறைகள், கதவுகள், சமையற் கூடம் ஆகியவற்றில் பகல், இரவுப் பொழுதுகள் உருவாக்கும் ஒளியின் தடம் எப்படியிருக்கும் என்பதை ப்ரியேஷ் குருசாமியின் ஒளிப்பதிவு, த்ரில்லர் தன்மை விலகாமல் காட்டியிருக்கிறது.
திரைக்கதையின் வேகத்துக்கு ஈடுகொடுத்துள்ள மற்றொரு அம்சம் பிரவீன்அந்தோணியின் படத்தொகுப்பு. கிளைமாக்ஸ் காட்சியை எவ்வளவு ‘நறுக்’கென்று வெட்ட முடியுமோ, அதில்கூர்மையாகத் தன் பணியைச் செய்து அசத்தியிருக்கிறார். சாம் சி.எஸ்ஸின் பாடல்களும் பின்னணி இசையும் கதைக் களத்துடன் பின்னிப் பிணைந்துஉறவாடியிருப்பது பலம்.
சேதுவாக வரும் ஹிருதுஹாரூன் நடிப்பு, நடனம்,ஆக்ஷன் காட்சிகள் இரண்டிலும் அசத்தியிருக்கிறார். காதல் காட்சிகளில் நெருக்கம் இருக்கிற அளவுக்கு அவரிடம் உணர்ச்சி இல்லை. நடிகை அனஸ்வரா ராஜன் தோற்றம் வழி ஈர்த்தாலும் நடிக்க ஏதுமில்லாமல் கடந்து போகிறார். பாபி சிம்ஹா கொடுத்த பணியை நிறைவேற்றி இருக்கிறார். முனீஸ்காந்துக்கு ஆக்ஷனுடன் நகைச்சுவை செய்யும் கூடுதல் பணி. ஸ்கோர் செய்திருக்கிறார்.
சிறையிலிருந்து தப்பிக்கும் செயல் திட்டத்தில் அதிகமாகக் கவனம் வைத்தவர்கள்,கதாபாத்திரங்களின் பிரச்சினைகளை இன்னும் கவனமாகத் தேர்ந்தெடுத்திருந்தால், தட்டையான த்ரில்லர் அனுபவம் என்பதைத் தாண்டி, உணர்வுபூர்வமாகவும் ஈர்த்திருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT