Published : 22 Feb 2023 08:01 PM
Last Updated : 22 Feb 2023 08:01 PM
மும்பை: பாலிவுட் நடிகை அலியா பட் தனது வீட்டில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட செய்திப் பக்கங்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நடிகை அலியா பட் மும்பையில் உள்ள தனது வீட்டின் ஓய்வு அறையில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் நேற்று செய்தி இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அலியாபட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நீங்கள் விளையாடுகிறீர்களா? நான் எனது வீட்டில் மதியம் நேரத்தில் சாதாரணமாக அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது யாரோ என்னை கண்காணிப்பதாக உணர்ந்தேன். நிமர்ந்து பார்த்தபோது எனது பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் இருந்த இரு ஆண்கள் என்னை படமெடுத்து கொண்டு இருப்பதை உணர்ந்தேன். எந்த உலகில் இது அனுமதிக்கப்படுகிறது? இது தனி நபர் மீதான அத்துமீறல்” என்று மும்பை போலீஸை டேக் செய்து குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அலியா பட்டுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர்கள் பலரும் கருத்துகளை பதிவிட்டனர். அலியா பட்டின் பதிவினை குறிப்பிட்டு அனுஷ்கா சர்மா, ”இவர்கள் இவ்வாறு செய்வது முதல்முறை அல்ல. ஒரு வருடத்திற்கு முன்னர் நாங்களும் இது தொடர்பாக பேசினோம். இம்மாதிரியான செயல்கள் அவர்களுக்கு மரியாதை அளித்திருக்கும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், இது முற்றிலும் அவமானமானது. ஊடகங்களிடம் நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர்கள் எங்கள் மகளின் படத்தை வெளியிட்டனர்” என்று பதிவிட்டார்.
அர்ஜுன் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இது மிகவும் அவமானகரமானது. இது அத்துமீறி பின்தொடர்வதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை. ஒரு பெண் பாதுகாப்பாக உணரவில்லை என்று கூறும்போது இது முற்றிலும் வரம்பு மீறிய செயல். வாழ்வாதாரத்திற்காக பிரபலங்களை புகைப்படம் எடுக்கும் எவரும் இது பரிதாபகரமான செயல் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இச்செயல் தனிநபரின் தனியுரிமையை ஆக்கிரமித்தலே” என்று பதிவிட்டிருந்தார். அலியா பட்டின் சகோதரி ஷாலின் பட்டும் இந்தச் செயலை கண்டித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT