‘சினிமா, சீரிஸின் ஆபாசங்கள்தான் இளைஞர்களை சீரழிக்கின்றன” - பாபா ராம்தேவ்
‘சினிமாவும், சீரிஸும் பெருவாரியான இளம்பருவத்தினரை கெடுத்து வருகின்றன’ என்று யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
கோவா, பானாஜியின் மிராமர் கடற்கரையில் நடைபெற்ற 3 நாள் யோகா பயிற்சி முகாமை அடுத்து, செய்தியாளர்களிடம் பாபா ராம்தேவ் கூறியது: “மருந்துகள் இல்லாமல் இயற்கையாகவே எப்படி நலமுடன் வாழ்வது என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்வதுதான் என் நோக்கம். தற்போது சமூகத்தில் ஆபாசங்களும், அநாகரிங்களும் பரவி வருவதைக் கண்டு நான் கவலைப்படுகிறேன்.
இன்று வெளியாகும் சினிமாக்களும், சீரிஸும் இளம்வயதினரை தவறான வழிக்கு அழைத்துச் செல்கின்றன. ஆபாசப் படங்கள் சர்வ சாதாரணமாக தயாரிக்கப்படுகின்றன. ஆபாசப் படங்களை மிஞ்சும் அளவுக்கு திரைப்படங்களின் காட்சிகளில் நஞ்சைப் பரப்புகிறார்கள். தொலைக்காட்சிகள் வாயிலாக ஒளிபரப்பாகும் தொடர்கள் மறைமுகமாக கீழ்த்தரமான செயல்களுக்கு வித்திடுகின்றன.
இவற்றால் இளம்வயதினர் பாதை மாறாது. முறையாக வழிப்படுத்த யோகாவால் மட்டுமே முடியும். இளம்வயதில் யோகா பயில்வது அவர்களது உடல், மனம் மற்றும் ஆன்ம பலத்துக்கு உதவியாகும். கூடுதலாக, பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களில் மதிப்புக் கல்வியை அதிகம் சேர்க்க வேண்டும். இந்த முயற்சிகள் உடனேயும் எடுக்கப்பட வேண்டும்” என்று பாபா ராம்தேவ் கூறினார்.
