Published : 13 Feb 2023 03:02 PM
Last Updated : 13 Feb 2023 03:02 PM
சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் நிர்வாகிகள் தேர்தலில், தேர்தல் அதிகாரியாக யாரை நியமித்து தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து வரும் புதன்கிழமை (பிப்.15) தெரிவிப்பதாக தயாரிப்பாளர் சங்கம் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், திரைப்பட கவுன்சில் உறுப்பினர்களான கமல்குமார், சீனிவாசன் உள்பட எட்டு தயாரிப்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில்,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், இரண்டு செயலாளர்கள், ஒரு பொருளாளர், 26 செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டிய இந்தத் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில், தென் இந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் இந்திய திரைப்பட சம்மேளனத்தில் நிர்வாகிகளாக உள்ளவர்கள் தவிர, வேறு சங்கங்களில் நிர்வாகிகளாக உள்ளவர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் போட்டியிட தகுதியில்லை என கவுன்சில் விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. பாரபட்சமான இந்த திருத்தத்தை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும்.
மேலும், மார்ச் 26ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரி நியமிக்கப்படவில்லை. உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து, வாக்காளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். இந்த தேர்தல் குறித்த அறிவிப்பை ரத்து செய்து , அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணை வந்தது. அப்போது தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணா ரவீந்திரன், "தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரியாக யாரை நியமிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை வரும் புதன்கிழமை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்" என்று கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் பிப்.15-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT