Published : 12 Feb 2023 03:06 PM
Last Updated : 12 Feb 2023 03:06 PM
‘‘சினிமாவை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தியவர் கமல்ஹாசன்” என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பா. இரஞ்சித் 'நீலம் புக்ஸ்' புத்தக விற்பனையகத்தின் திறப்பு விழா இன்று (12.2.2023 ) சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கமல்ஹாசன் வருகை புரிந்து புத்தக விற்பனையகத்தை திறந்து வைத்தார். திரளான புத்தக வாசிப்பாளர்களும், ரசிகர்களும், பத்திரிகையாளர்களும் இதில் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “புத்தக விற்பனை நிலையத்தை கமல் திறந்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தைரியமாக சென்று பார்த்தேன். நேற்று சொன்னதும் அவர் இன்று வந்துவிட்டார். அவருக்கு பெரிய மனது. புத்தகம், இலக்கியங்கள் மீது காதல் கொண்டிருக்கும் அவர் வந்தது மிக்க மகிழ்ச்சி.
புத்தகங்கள் தான் சினிமாவின் பக்கம் என்னை கொண்டு சென்றன. வாசிப்பின் வழியே உலகம் விரிந்தது. சினிமாவை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தியவர் கமல். கட்டங்களாக சினிமாவை பிரித்துப் பார்த்தாலே இது புரியும். கமல்ஹாசனின் பரிச்சார்த்த முயற்சிகளை ஆய்வு செய்தாலே கலைத்துறையில் அவருக்கான இடத்தை புரிந்துகொள்ள முடியும். அவரிடம் நான் கண்டு வியப்பது அவரின் எழுத்து. ‘விருமாண்டி’ படத்தை எழுதிய விதம் அந்த வாழ்க்கை முறையை கையாண்ட முறை ஆச்சரியமளிக்கிறது. ஆர்ட் ஃபிலிம்ஸை வெகுஜன சினிமாவுடன் கலந்து மக்களிடம் கொண்டு சென்றது கமல்ஹாசனின் முக்கியமான வேலை. அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
டிஜிட்டல் தளத்திற்கு சினிமாவை நகர்த்தியவர் கமல். வெறும் வியாபார நோக்கம் மட்டுமல்லாமல் கலை நேர்த்தியை உருவாக்கிய கமல் வந்தது எங்களுக்கு பெருமை. வாசிப்பின் மூலம் தான் நான் என்னையே அறிந்து கொண்டேன். அப்படி மற்றவர்களும் அவர்களை அறிந்துகொள்ளும் முயற்சி தான் இது. புத்தகங்கள் அடிமை சிந்தனையை மாற்றும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT