Published : 11 Feb 2023 05:45 PM
Last Updated : 11 Feb 2023 05:45 PM

”திரைப்பட வசூல் குறித்து ரசிகர்கள் விவாதிப்பதில் வருத்தமே” - விஜய் சேதுபதி வேதனை

“சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது மக்களுக்கு கற்றுக்கொடுக்கும் ஊடகம். பாக்ஸ் ஆபிஸ் விவாதங்களில் ரசிகர்கள் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது” என நடிகர் விஜய் சேதுபதி வேதனை தெரிவித்துள்ளார்.

நிகழ்வு ஒன்றில் ‘கலை மற்றும் வாழ்க்கை’ என்ற தலைப்பில் நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது, கடந்த 4-5 ஆண்டுகளாக தான் நடித்த படங்களை பார்ப்பதில்லை என தெரிவித்தார். அவர் மேலும் பேசும்போது, “நான் நடித்த படங்களை நானே பார்ப்பதில்லை. காரணம், என்னுடைய பெர்ஃபார்மென்ஸ் எனக்கே பிடிக்காது. ‘மாஸ்டர்’ படத்தை பார்க்கச் சென்றபோது என்னால் முழுமையாக படத்தை பார்க்க முடியவில்லை. என்னை திரையில் நானே பார்ப்பது வெட்கமாக இருந்தது. மேலும், என்னால் என் நடிப்பை பார்க்க முடியாது” என்றார்.

தொடர்ந்து சினிமா குறித்து பேசிய அவர், “மக்கள் தங்களது உழைப்பால் உண்டான தங்களது பணத்தையும், நேரத்தையும் கொடுத்து சினிமா பார்க்கின்றனர். அதற்கான பொறுப்புணர்வு இருக்க வேண்டும். இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் ஒருமுறை சொல்லும்போது, ‘சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல; எப்படி வாழ வேண்டும்? பெண்களை எப்படி மதிப்பது, கோபத்தை எப்படி கட்டுபடுத்துவது, தவறான பாதையை தேர்ந்தெடுத்தால் என்ன நடக்கும் என பல்வேறு விஷயங்களை சினிமா கற்றுக்கொடுக்கும்’ என்பார். ஆகவே சினிமா வெறும் பணத்திற்கானதல்ல. அப்படி நெறிமுறைகளுக்குட்பட்டு என் படங்களுக்கான ஸ்கிரிப்டை நான் தேர்வு செய்கிறேன்.

ஒரு படம் வெற்றி பெறுவதும், தோல்வியடைவதும் வெறும் நடிகர், இயக்குநருடன் சம்பந்தபட்டதல்ல. அதில் ஏராளமான விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. என் தந்தையை இன்ஸ்பிரேஷனாக கொண்டு ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தை எழுதினேன். ஆனால், என் சொந்த குடும்பத்தினரே படம் போர் அடிக்கிறது என்று சொல்லிவிட்டனர். காலங்கள் கடந்து தற்போது பலரும் அந்தப் படத்தை பாராட்டி வருகின்றனர். பல திரைப்படங்கள் காலம் கடந்து பாராட்டை பெறும். இதுவும் அப்படியான ஒன்றுதான்.

பாக்ஸ் ஆபிஸை வைத்து ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. ரசிகர்களில் ஒரு பகுதியினர் பாக்ஸ் ஆபிஸ் எண்களைப் பற்றி விவாதிப்பது வருத்தமளிக்கிறது” என்றார் விஜய் சேதுபதி.

சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஷில்பா கதாபாத்திரம் குறித்து கேட்டபோது, “ஷில்பா கதாபாத்திரத்தில் நடிக்கும்போது, ​​எனக்குள் இருக்கும் பெண்மையை அடையாளம் கண்டுகொண்டேன். அந்தக் கதாபாத்திரம் என்னுள் முழுமையாக தங்கிவிடுமோ என அச்சப்பட்டேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x