Published : 05 Feb 2023 01:08 PM
Last Updated : 05 Feb 2023 01:08 PM

புகழஞ்சலி - டி.பி.கஜேந்திரன் | “அவரைப்போன்ற நல்ல நண்பரை பார்க்கமுடியாது” - திரையுலகினர் பகிர்வு

இயக்குநரும் நடிகருமான டி.பி.கஜேந்திரன் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ராதாரவி: “டி.பி.கஜேந்திரன் நல்ல நண்பர். நெருங்கி பழக கூடியவர்.குடும்பத்தை நன்றாக கவனித்துக்கொண்டார். நல்ல மனிதர். எல்லோருடனும் நெருங்கி பழக கூடியவர். மகிழ்ச்சியாகவே இருப்பார். கடந்த 2 வருடங்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லை இருந்தபோதிலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தவர். அவருடைய மறைவு நம் திரையுலகத்திற்கு பெரிய இழப்பு. உண்மையான நண்பரான அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

மனோபாலா: “ஒருவாரமாக தமிழ் திரையுலகிற்கு என்ன நடந்தது என தெரியவில்லை. மரண செய்திகளை கேட்டுக்கொண்டிருக்கிறேன். டி.பி.கஜேந்திரன் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். விசுவிடம் அவர் பணியாற்றியபோதிலிருந்து எனக்கு பழக்கம். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.செல்வமணி: “டி.பி.கஜேந்திரன் மறைவு வேதனையளிக்கிறது. தொடர்ந்து திரையுலகைச் சேர்ந்த மூத்த கலைஞர்கள் மரணமடைந்து வருகின்றனர். கஜேந்திரன் மிகச்சிறந்த நண்பர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கி தொடர்புடையவர். 2, 3 மாதங்களுக்கு முன்பு கூட அவரைச் சந்தித்தோம். உடல்நிலை சரியில்லை, ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றார். அவருடைய இந்த திடீர் இழப்பு எங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது” என்றார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள டி.பி.கஜேந்திரன் உடலுக்கு மறைவுக்கு நடிகர்கள் கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

டி.பி.கஜேந்திரன் பிரபல இயக்குநர்களான கே.பாலசந்தர், விசு,, ராம நாராயணன் ஆகியோரிடம் டி.பி.கஜேந்திரன் உதவி இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார். 60க்கும் மேற்பட்ட படங்களில் அவர் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். பின்னர் இயக்குநராக அவதரித்தார். 1988 ஆம் ஆண்டு வீடு மனைவி மக்கள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ராமராஜனின் எங்க ஊரு காவல்காரன், கார்த்திக்கின் பாண்டி நாட்டு தங்கம், பிரபு நடிப்பில் பட்ஜெட் பத்மநாபன், பிரசன்னா நடிப்பில் சீனா தானா போன்ற குடும்பங்கள் கொண்டாடும் ஜனரஞ்சகமான படங்களை இயக்கி மக்கள் அபிமானத்தைப் பெற்றார்.

இதுதவிர 40க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். கமல்ஹாசனின் பம்மல் கே சம்பந்தம் படத்தில் திரைப்பட இயக்குநராக அவர் நடித்த காட்சிகள் மிகவும் பிரபலம். ’ட்ராலி ஃபார்வர்டு’ என்று அவர் கூறும் வசனமும் ட்ரெண்டில் இருந்தது. இந்நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்தார். உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் இதய நோய்க்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீட்டில் இருந்தபடியே ஓய்வு எடுத்துவந்தார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இந்நிலையில் இன்று (பிப்.5) காலை அவர் உயிர் பிரிந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x