Published : 04 Feb 2023 05:45 AM
Last Updated : 04 Feb 2023 05:45 AM

‘சங்கராபரணம்’ வெளியான தேதியில் மறைந்த பிரபல இயக்குநர் கே. விஸ்வநாத் - திரைத்துறையினர் கண்ணீர் அஞ்சலி

பிரபல இயக்குநர் கே. விஸ்வநாத் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 92. சங்கீதம், நாட்டியம், கலாச்சாரம் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர் இயக்குநர் கே. விஸ்வநாத் (92). இவர் ஆந்திர மாநிலம், குண்டூர்பெதபுலிவர்ரு கிராமத்தில், சுப்ரமணியம்-சரஸ்வதி தம்பதியினருக்கு 19.2.1930ம் தேதி பிறந்தார். ‘கலாதபஸ்வி’ என்று அழைக்கப்படும் இவர், ஹைதராபாத்தில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் (பிப். 2) இரவு அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. உடனடியாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார். இதைத் தொடர்ந்து அவரது உடல் ஹைதராபாத்தில் உள்ள அவர் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

அவர் மறைந்த செய்தி அறிந்த தெலுங்கு இயக்குநர்கள் ராகவேந்திர ராவ், ராஜமவுலி, சுகுமார் , நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண், வெங்கடேஷ், கோட்டா ஸ்ரீநிவாச ராவ், பிரம்மானந்தம், நடிகைகள் ராதிகா, ஜீவிதா மற்றும் தயாரிப்பாளர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர் உடல் தெலுங்கு ஃபிலிம் சேம்பருக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அங்கு திரளான ரசிகர்களும் திரையுலகினரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “கே.விஸ்வநாத்தின் மறைவு வருத்தமளிக்கிறது. திரையுலகில் பன்முக படைப்பாற்றலைக் கொண்ட தலைசிறந்த இயக்குநர். அவர் படங்கள் பல தசாப்தங்களாக மக்களை மகிழ்வித்தன. அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கலில், ‘‘விஸ்வநாத் மறைவு மிகுந்த மனவேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. அவர் மறைவு இந்திய திரையுலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு” என்று தெரிவித்துள்ளார்.

தெலங்கானா, ஆந்திர முதல்வர்கள், சந்திரசேகர ராவ், ஜெகன் மற்றும் தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, நடிகர் கமலஹாசன் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

‘சங்கராபரணம்’ வெளியான தேதியில் மறைவு: இயக்குநர் கே.விஸ்வநாத் 50 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். ஒவ்வொரு படமும் ஒரு பாடமாக அமைந்தது. இவர் படங்களை இயக்கும் போது காக்கி நிற பேன்ட் சட்டை அணிந்து தானும் ஒரு தொழிலாளி என்பதை உணர்ந்து படத்தை இயக்குவார். இவர் படங்களின் முதல் எழுத்து ‘எஸ்’ என தொடங்கும் விதத்தில் பெயர் சூட்டுவார். குறிப்பாக ‘சங்கராபரணம்’,‘சாகர சங்கமம்’ (சலங்கை ஒலி), ‘ஸ்வாதிமுத்யம்’ (சிப்பிக்குள் முத்து) உட்பட இவர் இயக்கிய 90 சதவீத படங்களும் அப்படியானவைதான்.

கர்நாடக சங்கீதத்தை மையமாகக் கொண்டு இவர் இயக்கிய ‘சங்கராபரணம்’, 1980-ம் வருடம் பிப். 2-ம் தேதி வெளியானது. இந்தத் திரைப்படம் வெளியாகி 43 ஆண்டுகள் கழித்து, அதே பிப் 2-ம் தேதி மறைந்துள்ளார் இயக்குநர் விஸ்வநாத். இவர் தெலுங்கு, தமிழ், கன்னட மொழிகளில் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x