Last Updated : 30 Jan, 2023 02:08 PM

3  

Published : 30 Jan 2023 02:08 PM
Last Updated : 30 Jan 2023 02:08 PM

“நாம் யாரும் யோக்கியர்கள் கிடையாது... குற்ற உணர்வு உண்டு” - ‘அயலி’ இயக்குநர் முத்து குமார் நேர்காணல்

அயலி இயக்குநர் முத்து குமார்

“அயலியை தனிப்பட்ட முறையில் தங்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கிறார்கள். அதுதான் முக்கியம் என நினைக்கிறேன். ஒரு பொண்ணுக்கு என்னென்ன பிரச்னையிருக்கும் என யோசிக்கும்போது, நானுமே பெண்ணுக்கு பிரச்சினையை கொடுத்திருக்கிறேன் எனும்போது அந்த குற்றவுணர்ச்சியை தொட நினைத்தேன்” என்று அயலி உருவான கதையையும், அது ஏற்படுத்திய தாக்கத்தையும் பகிர்கிறார் இயக்குநர் முத்து குமார்.

ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘அயலி’ இணையத் தொடர், பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தத் தொடர் குறித்து அதன் இயக்குநர் முத்து குமார் உடனான நேர்காணல்...

எப்படி உருவானாள் ‘அயலி’?

“இன்றும் குழந்தைத் திருமணங்கள் நடக்கிறது என்று சொன்னால் நம்மில் யாரும் நம்பமாட்டோம். நானும் அப்படித்தான் இருந்தேன். 12 வருடங்களுக்கும் மேலாக சென்னையில் இருக்கிறேன். கிராமத்தை ஒப்பிடுகையில் நகரங்களில் பெண்களின் பங்கு அதிகம். அப்படி இங்கே பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட்டிருக்கிறது என நான் நினைத்திருந்தேன். பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது என நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது நண்பர் ஒருவர், பருவமடைந்து 6 மாதமான பெண் ஒருவருக்கு திருமணம் நடந்திருக்கிறது என்றார். அது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இன்னும் பிற்போக்குத்தனமாக, சாதியவாதமாக இப்படியான செயல்கள் நடைபெற்று வருகிறது. வெளியில் தெரிவதில்லை.

நாம் வளர்ந்த பகுதிகளைத்தான் பார்த்து வருகிறோம். ஆழமாக சென்று பார்த்தால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இப்படியான விவாதத்தின்போது, கோபம் வந்தது. அப்போது வந்தது ஐடியாதான் அயலிக்கான கரு. அதாவது, ஒருவேளை அந்தப் பெண் தான் பருவமடைந்ததை மறைத்துவிட்டால், எப்படி திருமணம் செய்து வைக்க முடியும்? என அப்படி யோசித்ததுதான் அது. இது ஒரு பர்சனல் விஷயம். அந்த பொண்ணுக்கு மட்டுமே தெரிந்த விஷயம் இது. அப்படி தோன்றின ஐடியா தான் அது. 4, 5 வருடங்களுக்கு முன் எனக்கு இந்தச் செய்தி தெரிய வந்தது. அந்த தருணத்திலிருந்து நான் இதை டெவலப் செய்து ‘அயலி’யை உருவாக்கினேன்.”

‘அயலி’யில் காட்டப்படுவது போல வீரபண்ணை கிராமம் மற்றும் அங்கு நடைபெறும் இது மாதிரியான வழக்கங்கள் உண்மையா? கற்பனையா?

“உண்மையில் சொல்லப்போனால் வீரப்பண்ணை என்கிற கிராமமே கிடையாது. முழுக்க முழுக்க எங்களின் கற்பனை இது. அயலி என்ற நாட்டார் தெய்வமும் நாங்களே உருவாக்கியது தான்.”

நீங்கள் நினைத்திருந்தால் இதனை ஒரு படமாக எடுத்திருக்கலாம். ஆனால் தொடராக எடுக்க வேண்டும் என யோசித்தது ஏன்? அதற்கான காரணம் என்ன? ஏனென்றால் வெப் சீரிஸ் என்றாலே இங்கே க்ரைம் கதைகளாகத்தான் இதுவரை அதிகம் எடுக்கப்பட்டிருக்கிறது. அயலி எப்படி இதிலிருந்து விலகி உருவானாள்?

“கரோனா காலக்கட்டத்திலேயே இந்தக் கதையை முடிவு செய்துவிட்டேன். அப்போது இது படமாகத்தான் எடுக்க திட்டமிட்டிருந்தோம். அப்போது ஓடிடிக்கான வளர்ச்சி இந்த அளவுக்கு இல்லை. திரைப்படத்துக்கு என ஒரு கால அளவு இருக்கின்றதல்லவா? அதற்குள் ‘அயலி’யை அடக்க முடியவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்திலிருந்தேன். அப்போதுதான் ராம்ஜி இதனை ஜீ-க்கு கொண்டு சென்றார்கள். அவர்கள் தற்போது வெப்சீரிஸூக்கான டிமான்ட் அதிகமாக உள்ளது. வெப் சீரிஸாக செய்ய முடியுமா? என கேட்டனர். நான் கொஞ்சம் யோசித்தேன். காரணம், திடீரென திரைப்படத்திலிருந்து வெப்சீரிஸுக்கு மாற்றுவது குறித்து யோசித்தேன்.

கரோனா காலக்கட்டத்தில் தானே ஓடிடி பெரிய அளவில் வளர்ந்தது. ஆகவே, இது மக்களின் ஊடகமாக மாறிவிட்டது ஒன்று, மற்றொன்று நான் முன்பே கூறியது போல எனக்கு தேவைப்பட்ட கால அளவும் வெப் சீரிஸில் பூர்த்தியாகும்படி இருந்தத்தால் நான் ஓடிடியை தேர்வு செய்தேன். அப்படித்தான் இது நிகழ்ந்தது.”

‘அயலி’க்கான உங்களின் கிரவுண்ட் ஒர்க் என்னவாக இருந்தது? இதைப் பற்றி வெளியில் பேசியே தீர வேண்டும் என உங்களை தனிப்பட்ட முறையில் தூண்டிய விஷயங்கள் எதாவது இருக்கிறதா? இதற்கான உந்துதல் எப்படி கிடைத்து?

“முதலில் நான் இது பெண் - ஆண் என பிரித்துப் பார்க்கவில்லை. ஓர் உயிர் அதற்கேயுண்டான சுதந்திரத்துடன் வாழ முடியவில்லை. பெண்ணாக இருப்பதனால் சில தடைகள் இருக்கிறது. ஒரு பெண் குழந்தைக்கு எந்த வயதிலிருந்து தடைகள் தொடங்குகிறது. பெரியவளாகும்போது அதற்கான தடைகள் தொடங்குகிறது. ‘நீ பெரியவள் ஆகிவிட்டாய்’ என்று கூறியே ஒரு பெண்ணை எந்த முடிவும் எடுக்க அனுமதிப்பதில்லை. ஆனால், இதுவே ஒரு ஆணாக இருக்கும்பட்சத்தில் அவனிடம், ‘நீ பெரியவனாகிவிட்டாய்.. எல்லா முடிவும் நீ தான் எடுக்க வேண்டும்’ என்கின்றனர். இதுவே பெண்ணிடம், ‘நீ பெரியவளாகவிட்டாய் தனியாக எங்கும் செல்லக் கூடாது’ என்கின்றனர். இதையெல்லாம் நாம் கேட்டு வளர்ந்திருக்கின்றோம்.

ஏன் நானே கூட என் வீட்டில் அப்படிச் சொல்லியிருக்கிறேன். நம் வாழ்க்கையை திரும்பி பார்க்கும்போது தான் நாம் எவ்வளவு முட்டாளாய் இருந்திருக்கின்றோம் என தெரிகிறது. சமூகத்தில் நான் பார்த்த அனைத்தையும் பிரதிபலிக்கும் படைப்பு தான் இது. ‘அயலி’க்கான தயாரிப்புகள் என எடுத்துகொண்டால் பெரியாரின் புத்தகங்கள், தொ.பா, தமிழ்செல்வன், பிரியா தம்பி என ஏகப்பட்ட புத்தகங்களை படித்து அதிலிருந்து இன்புட் எடுத்துக்கொண்டேன். அவை எனக்கு பெரிய அளவில் கைகொடுத்தன.

நாட்டார் தெய்வ வழிபாட்டை ஆணாதிக்கத்துக்கான ஒரு கூறாக பார்க்கிறீர்களா?

“வழிபாடு என்பதை விட்டுவிடுங்கள். ஒரு ஏரியாவில் இருக்கும் மக்கள் காலை இத்தனை மணிக்கு எழுந்து சென்றால் பேருந்து கிடைக்கும் என்றால் எழுந்து செல்வோம். அதேபோல இரவு இத்தனை மணிக்குள் பேருந்து கிடைக்கும் என்றால் அந்த நேரத்திற்கு தயாராகிவிடுவோம். இது ஒரு டெய்லி பிராக்டீஸ். இது ஒருக்கட்டத்தில் நிறுவனமயப்படுகிறது. இந்தப் பழக்க வழங்கங்களுக்கென்று ஒரு தலைவன், அதற்கென ஒரு குறிப்பிட்ட மக்கள், அவர்களை கண்காணிக்க ஒரு கூட்டம், அவர்கள் சொல்வதைத்தான் செய்ய வேண்டும் என பழக்கவழங்கள் நிறுவனமயப்படும்போது அங்கே யாரோ ஒருவர் நிச்சயம் ஒடுக்கப்படுவார்.

வரலாற்று ரீதியாக பார்க்கும்போது அது யாராக இருக்கீறார்கள் என்றால், அது பெண்களாக இருக்கிறார்கள். அதனால், இந்த மதம், அந்த மதம், இந்த வழிபாடு, இந்த அந்த வழிபாடு என்றெல்லாம் இல்லை. வெகுஜனக் கூட்டம் ஒன்றை ஒரு குறிப்பிட்ட குழு கட்டுப்படுத்தி வழிநடத்தும்போது, அங்கே ஒடுக்கப்படுவது கண்டிப்பாக பெண்கள். நீங்கள் அதை சிறு தெய்வ வழிபாடு என வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு பெயரிட்டுகொள்ளலாம்.”

கதாபாத்திர தேர்வுகள் குறித்து..

“முழுமையாக ஆடிஷன்ஸ் வைத்து எடுத்தோம். அதில் அபியின் நடிப்பு திருப்திகரமாக இருந்தது. நான் எழுதும்போது எந்த நடிகர்களையும் மனதில் வைத்து எழுதவில்லை. அக்கம், பக்கத்து வீட்டு பெண்களை மட்டுமே வைத்து எழுதினேன். அதற்கு யார் சரியாக இருப்பார்கள் என நினைத்து அதில் கதாபாத்திரங்களை பொருத்தினேன். எல்லோரும் ஒரே சைட். அதில் ஒரு பெண் மட்டும் அவுட் சைட். அப்படியிருக்கும்போது ஒவ்வொருவரின் குணாதிசயங்களின் வித்தியாசங்களை கச்சிதமாக காட்சிப்படுத்த முடிவுசெய்து அதற்கேற்ற நடிகர்களை தேர்வு செய்தோம்.”

வசனங்கள் ‘ஷார்ப்’ ஆக எழுதப்பட்டிருந்தன. அது குறித்து..

“வீணை மைந்தன், சச்சின் நண்பர்கள் சேர்ந்து எழுதினோம். ஒரு சீன் என்றால் கதையை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு நகர்த்துவது. அப்படி ஒவ்வொரு கட்டமாக தகவல்களுடன் நகர்த்த வேண்டும். அதனை அதற்கேயுண்டான அளவில், இவ்வளவாகத்தான் இருக்க வேண்டும் என முடிவெடுத்தோம். எடிட்டிங்கிலும் கூட சில விஷயங்களை செய்தோம். ஒரு சூழ்நிலையில் அந்தக் கதாபாத்திரத்தின் மனநிலை வெளிப்பாடு என்னவாக இருக்கும் என்பதை சொல்ல முனைந்தோம். ஒரு சூழலில் அந்தக் கதாபாத்திரம் எப்படி ரியாக்ட் செய்யும், அதனை எப்படி கதைக்காக மாற்றுவது? அந்தக் கதாபாத்திரம் என்ன முடிவெடுக்கும் என்பதை வைத்து சீன்களை உருவாக்கினோம்.

முடிந்த அளவுக்கு கேரக்டரின் எமோஷனலை வெளிப்படுத்த நினைத்தோம். இது பிரசாரமாக சென்றுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். இது தப்பு என புரிந்துகொண்டவர்களுக்கு இது இவ்வளவு சொல்லவேண்டியதில்லை. அது பத்தாது தானே? நம்பிக்கையின் அடிப்படையில் மக்கள் இதனை பின்பற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இதனை புரிய வைக்க நினைத்தேன். எமோஷனலாக ஒரு விஷயத்தை அழுத்தமாக சொல்ல முயன்றோம்.”

தொடரில் மைய வில்லன் கதாபாத்திரமான லிங்கா கதாபாத்திரம்தான் ஒட்டுமொத்த ஆண்களையும் தவறாக வழிநடத்து தூண்டிவிடுகிறார். யாரோ ஒரு சில ஆண்கள் தான் அப்படி. மற்றவர்கள் அப்படியில்லை என்ற சித்தரிப்பு?

“ஆணாதிக்கம் என்பது எல்லோருக்குள் இருக்கிறது. ஆணுக்கே இங்கே மிகப்பெரிய அழுத்தங்கள் இருக்கிறது. ஒரு ஆணாக இருப்பதாலேயே அவனுக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால், ஒப்பீட்டளவில் அவனுக்கு சலுகைகள் கிடைத்துவிடுகின்றன. பண்பாடும், பழக்கவழக்கமும் நிறுவனமயப்படும்போது, அதிலிருந்து உங்களால் விடுபடமுடியாதபோதும் தான் பிரச்சினை தொடங்குகிறது. காலத்துக்கு ஏற்றது போலவோ, விருப்பத்தினாலோ நான் தொடர்ந்து செய்யப்பட்டு வரும் பழக்கங்களிலிருந்து விலக முற்படுகையில், நீங்கள் விலக கூடாது என கட்டுப்படுத்தும் குறிப்பிட்ட சிலர் தான் எனக்கு பிரச்சினை. அந்த மக்கள் நல்லவர்கள் என சொல்லவில்லை. ஆனால் அவர்கள் கெட்டவர்கள் கிடையாது.

இன்னும் சொல்லப்போனால் மக்கள் நல்லவர்களுமில்லை, கெட்டவர்களுமில்லை. அவர்களுக்கு போதிக்கப்பட்டதை பின்தொடர்கின்றனர். இந்த மாதிரியான அழுத்தங்கள் இல்லாமலிருந்தால் தமிழ் செல்வி அவரது அப்பாவிடமே பேசிய முடிவெடுத்திருப்பாள். ஒரு விஷயத்தை எதிர்த்து கேள்வி கேட்காமல் பின் தொடர்வதுதான் சக்திவேல் மாதிரியான ஆட்களுக்கு ஊக்கத்தையும் பலத்தையும் கொடுத்துவிடுகிறது. நம் அனைவருக்குமே தெரியும், நாம் யோக்கியர்கள் இல்லை என்பது. நம் அனைவரும் அவ்வளவு சரியாக கடவுளுக்கு பயந்தா வாழ்கிறோம்? அப்படியிருந்தால் தவறே நடக்காதே? சிலர் இதனை தங்களின் சுயநலத்திற்காக பயன்டுத்துகின்றனர். அவர்கள்தான் என் பிரச்சினை. ஒரு விஷயத்தை பழகும் மக்கள் என் பிரச்சினையில்லை. அதிலிருந்து மீளும்போது அவர்கள் மீள விடாமல் தடுப்பதுதான் என் பிரச்சினை.”

இறுதியில் உடனே எல்லோரும் நல்லவர்களாவிடுகிறார்களே?

“ஒரு கதையை எந்த அளவிற்கு நியாயமாக எடுக்கிறேன் என்பதை விட, அதை எந்த அளவிற்கு கொண்டு போய் சேர்த்திருக்கிறேன் என்பதுதான். தொடரில் பார்க்கும்போது அந்த கதாபாத்திரங்கள் உங்களுடன் பொருந்திபோகிறதா, உங்களை நியாபகப்படுத்துகிறதா என்பதை தான் கவனிக்க வேண்டும். தமிழ்செல்வியின் அப்பா இதெல்லாம் பாசம் என நம்புகிறார். ‘ஆனால், அது பாசமில்லை. கௌரவத்திற்காக தான் செய்றப்பா’ என மகள் சொல்லும்போது உடைந்துவிடுகிறார். அப்போது கௌரவம் முக்கியமா? பாசம் முக்கியமா? என வரும்போது பாசத்தை தேர்ந்தெடுக்கிறார். அதற்காக தான் அவருக்கு ஒரு இடைவெளியிருந்திருக்கும்.

எப்படிப் பார்த்தாலும் கதைக்கு ஒரு முடிவு கொடுத்தாக வேண்டும் தானே? அந்த முடிவு பாசிட்டாவாக முடியும்போது தான் பலரும் தங்களை தவசியுடன் இணைத்துக் கொள்வார்கள். அப்படி அவர்களை ஒரு குற்றவுணர்ச்சியுடன் விட்டால் அவர்கள் என்னை எதிரியாக்கிவிடுவார்கள். என் நோக்கம் அவர்களை கெட்டவர்கள் என அடையாளம் காட்டுவதல்ல. பெண்ளை சுதந்திரமாக இருக்க விட்டு, அவர்களின் விருப்பத்தை கேளுங்கள் என்பதுதான். குடும்பத்தில் பேசி நாம் முடிவு செய்வோம். மற்றவர்களுக்கு அந்த இடத்தை கொடுக்க வேண்டாம் என்பதுதான் சொல்ல வருவது.”

தொடரில் தமிழ்செல்வி கதாபாத்திரம் மொத்த கிராமத்திற்கு விடுதலை பெற்று தரும் இந்த ஹீரோயிச, மீட்பர் சித்தரிப்பு உண்மையில் தேவைதானா?

“கதைப்படி பார்த்தால் அங்கிருந்து மீள்வதற்கான வழி யாருக்கும் தெரிவதில்லை. மைதிலி கூட போராடுகிறாள். ஆனால், பலனளிக்கவில்லை. அங்கிருக்கும் எல்லோரும் அப்படித்தான் இருந்திருப்பார்கள். ஆனால், மீண்டும் அந்த வாழ்க்கையிலேயே உழன்றிருப்பார்கள். அப்படியிருக்கும்போது ஒரு பொண்ணுக்கு அதிலிருந்து வெளியேற ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. அதனை அவள் பயன்படுத்திகொள்கிறாள். அது ஒரு மீட்பர் எல்லாம் இல்லை. அது இன்னொரு சுயநலம். அவள் படிக்க வேண்டுமென்றால் அந்த ஊர் மாற வேண்டும் என்ற சுயநலம்தான்.”

ஓடிடி தளத்தை எப்படி பார்க்கிறீர்கள்? படைப்பாளியாக உங்களுக்கு அது கொடுக்கும் சுதந்திரம் என்ன?

“ஒரு திரையில் மாஸ் ஆடியன்ஸை கட்டுப்படுத்துவது சிரமம். திரையரங்கில் எங்கேயோ தொடங்கும் கமென்ட் மற்றும் நெகட்டிவ் விஷயங்கள் ஒட்டுமொத்தத்துக்கும் ட்ராவலாகும். அப்படி 100 பேரையும் ஒரே பாயின்ட் ஆஃப்பில் உட்கார வைப்பது சிரமம். ஆனால், ஓடிடி தனிப்பட்ட முறையில் உங்களுடன் பேசும். உங்களை தொந்தரவு செய்யும். சில கதைகளை திரையரங்குகளில் பண்ண முடியாது என தோன்றும். ஏனென்றால் அதை ஆடியன்ஸ் 100 பேர் ஒன்றாக உட்கார்ந்து பார்க்க மாட்டார்கள். அப்படியான கதைகளுக்கு ஓடிடி தளம் ஒரு வரப்பிரசாதம். இங்கே அதிகமான கன்டென்டுகளை கேட்கிறார்கள். கன்டென்ட், கன்டென்ட் என புதிதாக கேட்கிறார்கள். அதே சமயம் எல்லாவற்றிலும் இருக்கும் ப்ளஸ், மைனஸ் இதிலும் உண்டு. ஒரு படத்தை 2 வருஷத்திலும் எடுக்கலாம். வெப் சீரிஸை அப்படி எடுக்க முடியாது. இதற்கான ப்ராஸஸ் வேறு மாதிரியாக இருக்கும்.”

‘அயலி’யை எப்படி கொண்டாடுகிறார்கள்? வரவேற்பு எப்படியிருக்கிறது?

“தொடருக்கான வரவேற்பு சிறப்பாக உள்ளது. அதைத் தாண்டியும் பலரும் இதனை தனிப்பட்ட முறையில் தங்களுடன் தொடர்புபடுத்தி பார்க்கிறார்கள். அதுதான் முக்கியம் என நினைக்கிறேன். அதுதான் மகிழ்ச்சி. ஒரு விஷயத்தை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் பொருத்திப்பார்க்க வேண்டும் என நினைத்தேன். மாஸாக சென்று சேர்வதைவிட தனிப்பட்ட ஒவ்வொரு நபரும் அதனுடன் உரையாட வேண்டும் என்பது தான் நோக்கம்.

ஒரு பொண்ணுக்கு என்னென்ன பிரச்னையிருக்கும் என யோசிக்கும்போது, நானுமே பெண்ணுக்கு பிரச்சினையை கொடுத்திருக்கிறேன் எனும்போது அந்த குற்றவுணர்ச்சியை தொட நினைத்தேன். அந்த குற்ற உணர்ச்சி வர வேண்டும். தொடரை பார்த்துவிட்டு இன்றை தலைமுறையினர் பலரும் என் அம்மா எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்திருப்பார்கள் என்பதை உணர்ந்திருந்திருக்கிறார்கள். காரணம், அம்மா மீதான கருத்து மாறுப்பட்டிருந்தது. ‘ஒண்ணுமே படிக்கல. அம்மாக்கு என்ன பெருசா தெரியபோகுது?. நாலு வார்த்த இங்கிலீஷ்ல பேச தெரியாது’ என இருந்த இந்த தலைமுறையின் மனநிலை மாறி, ‘இத்தனை சிரமங்களை கடந்து இங்கே வந்திருக்கிறார் அம்மா. அந்த கஷ்டம் நமக்கு இல்லை’ என்ற புரிதலைத்தான் நான் கொண்டுவர நினைத்தேன். அதற்கு நிறைவேறியிருக்கிறது. பலரும் தங்களை அயலியாகவே நினைத்துகொள்வது மகிழ்ச்சி.”

அடுத்தடுத்த படைப்புகள் குறித்து...

“நிறைய வாய்ப்புகள் வருவது சந்தோஷமாக இருக்கிறது. முதன்முறையாக ஒரு படம் செய்பவரை பாராட்டி, படம் செய்ய அழைக்கிறார்கள். நிறைய அழைப்புகள் வருகிறது. அடுத்து ஒரு படத்திற்கான ஐடியா உள்ளது. அதை எழுத ஆரம்பித்துள்ளேன். சீக்கிரம் அந்தப் படைப்பை திரையில் காணலாம்.”

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x