Published : 26 Jan 2023 07:45 PM
Last Updated : 26 Jan 2023 07:45 PM
மும்பை: ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘பதான்’ திரைப்படம் பாலிவுட்டில் புதிய வரலாறு படைத்துள்ளது.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படத்தை ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார். இப்படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யாஷ் ராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் 50-வது படமாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. படத்தின் ட்ரெய்லரின் தமிழ் பதிப்பை நடிகர் விஜய் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், படம் நேற்று (ஜனவரி 25) உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியானது. 8000 ஆயிரம் திரைகளில் வெளியிடப்பட்டது. படம் உலகம் முழுக்க முதல் நாள் ரூ.106 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் இந்தப் படம் ரூ.55 கோடியை வசூலித்து, பாலிவுட்டின் அதிகபட்ச ஓப்பனிங் படம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.
முன்னதாக, ஆமீர்கானின் ‘தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ படம் ரூ.79 கோடியுடன் பாலிவுட்டின் அதிகபட்ச ஓப்பனிங்காக இருந்தது. அந்த சாதனையை ஷாருக்கானின் ‘பதான்’ முறியடித்துள்ளது. தவிர, இந்தியாவில் மட்டும் ரூ.57 கோடியை வசூலித்து பாலிவுட்டின் அதிகபட்ச ஓப்பனிங்குக்கான மைல்கல்லை நிறுவியுள்ளது. இதற்கு முன்னர் ஆமீர்கானின் ‘தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ படம் இந்தியாவில் முதல் நாளன்று ரூ.50 கோடியை வசூலித்து முதலிடத்தில் இருந்தது. கிட்டத்தட்ட 5 வருடங்களாக தகர்க்கபடாமல் இருந்த சாதனையை இப்படம் தகர்த்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் 100க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் திரையிடப்படும் முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையையும் படம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டைப் பொறுத்தவரை பாலிவுட்டுக்கு போதாத காலம் என்றிருந்த நிலையில் இந்த ஆண்டின் தொடக்கதில் வசூலை வாரி குவித்துள்ளது ‘பதான்’. படம் ஒருவாரத்திற்குள் ரூ.300 கோடியை வசூலிக்கும் என கூறப்படுகிறது. இதையெல்லாம் கடந்து விடுமுறை அல்லாத நாளில் ஒரு படம் இப்படியான வசூலை குவிப்பது இதுவே முதன்முறை என்கின்றனர். ஷாருக்கான் படங்களிலேயே அதிகபட்ச வசூல் சாதனை படைத்த படமாகவும், பாலிவுட்டின் முதல் நாள் வசூலில் புதிய வரலாறு படைத்த படமாகவும் ‘பதான்’ கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT