Published : 24 Jan 2023 01:53 PM
Last Updated : 24 Jan 2023 01:53 PM
இயக்குநரும், எழுத்தாளரும், நடிகருமான ஈ.ராமதாஸ் மறைவுக்கு திரையுலகினர் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், இயக்குநரும், எழுத்தாளருமான ஈ.ராமதாஸ் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். விழுப்புரத்தைச் சேர்ந்த ராமதாஸ், சினிமா மீதான ஈர்ப்பால் சென்னைக்கு வந்தவர். எழுத்தாளராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர். ‘ஆயிரம் பூக்கள் மலரட்டும்’, ‘ராஜா ராஜாதான்’, ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு’, ‘இராவணன்’,‘வாழ்க ஜனநாயகம்’, ‘சுயம்வரம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அதேபோல் எழுத்தாளராக எண்ணற்ற படங்களில் வேலை பார்த்துள்ளார்.
சமீபகாலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்த ராமதாஸ், ‘காக்கிச் சட்டை’, ‘விசாரணை’, ‘அறம்’, ‘விக்ரம் வேதா’, ‘மாரி 2’ உள்ளிட்ட படங்களில் உறுதுணை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவரின் மறைவை அடுத்து திரையுலக பிரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேரில் அஞ்சலி செலுத்திய பின் பேட்டியளித்துள்ள நடிகர் மனோபாலா, “கடைக்கோடி கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்த ஈ.ராமதாஸ் நேராக என் ரூமுக்குத்தான் வந்தார். நல்ல எழுத்தாளர்; நெருக்கமான நண்பர். அவரது மறைவுக்கு மிகப் பெரிய இழப்பு. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்” என தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சீனுராமசாமி பேசுகையில், “திரைப்பட வசனகர்த்தா, எழுத்தாளர், இயக்குநர், யதார்த்தமான நடிகர் என பன்முக திறமைகொண்ட ஈ.ராமதாஸ் மறைவு உண்மையில் ஒரு பேரிழப்பு. குறிப்பாக என்னைப் போன்ற ஆட்களுக்கு அவர் நல்ல வழிகாட்டியாக இருந்தவர். உண்மையாக மனதில் பட்டதை பேசுபவர். சினிமாவில் இப்படியொருவரை பார்ப்பது கடினம். என்னுடைய ‘தர்மதுரை’ படத்தில் தான் எங்களுக்கு பழக்கம். பிறருக்கு வாய்ப்பை வாங்கி கொடுப்பதில் ஆர்வம் காட்டுபவர். அவருடைய ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பாக்யராஜ் பேசுகையில், “ராமதாஸ் சினிமாவில் பேரனுபவம் கொண்டவர். சீரியல்களை இயக்கியிருக்கிறார். யாருக்கு எந்த உதவி வேண்டுமென்றாலும் முடிந்த அளவுக்கு செய்து கொடுப்பவர். அவரது பிரிவு அனைவருக்கும் இழப்பு. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
கண்கலங்கிய இயக்குநர் சந்தானபாரதி, “40 வருடமாக ராமதாஸ் எனக்குத் தெரியும். உதவி இயக்குநராக இருக்கும்போதே பழக்கம். நல்ல எழுத்தாளர். நிறைய சீரியல்களையும், படங்களையும் இயக்கியுள்ளார். என் மீது அண்ணா அண்ணா என உயிராக இருந்தார். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்” என கூறியுள்ளார்.
இதேபோல், சமூக வலைதளங்களிலும் பலரும் ஈ.ராமதாஸு புகழஞ்சலி பதிவிட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT