Published : 23 Jan 2023 02:12 PM
Last Updated : 23 Jan 2023 02:12 PM
‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் மூலமாக பிரபலமான கோபி மற்றும் சுதாகர் இணைந்து தயாரித்து நடிக்கும் படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது.
‘மெட்ராஸ் சென்ட்ரல்’ என்ற யூடியூப் சேனலின் வழியே சமகால அரசியல் நிகழ்வுகளை பகடி செய்து பிரபலமடைந்தவர்கள் கோபி மற்றும் சுதாகர். பின்னர் அந்த யூடியூப் சேனலிலிருந்து வெளியேறி ‘பரிதாபங்கள்’ என்ற பெயரில் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து பல்வேறு விஷயங்களை நகைச்சுவையுடன் வீடியோக்களாக வெளியிட்டு பரவலான ரசிகர்கள் கூட்டத்தை பெற்றுள்ளனர். தற்போது இந்த யூடியூப் சேனலை 4.33 மில்லியனுக்கு அதிகமான பார்வையாளர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.
சினிமாவை லட்சியமாக கொண்ட இருவரும் இணைந்து க்ரவுட் பண்டிங் முறையில் படம் ஒன்றை தயாரித்து வெளியிட திட்டமிட்டனர். இதற்காக ஃபண்ட்மெலன் செயலி மூலம் நிதி திரட்டினர். இதன்மூலம் பரிதாபங்கள் யூடியூப் சேனலுக்கு 6.5 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டதாக கூறப்பட்டது. பொது மக்களிடம் நிதி கிடைத்ததை அடுத்து, ‘ஹே மணி கம் டுடே, கோ டுமாரோ’ என்ற தலைப்பில் உருவாகும் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருந்தனர்.
கரோனா ஊரடங்கு காரணமாக தாங்கள் தயாரிக்கும் படம் தாமதமாவதாகவும், விரைவில் இந்தப் படத்தை தொடங்குவோம் என கடந்த இருவரும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரித்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இந்தப் படத்திற்கான பணிகள் சென்னை பிரசாத் லேப்பில் இன்று பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தை விஷ்ணு விஜயன் என்ற அறிமுக இயக்குநர் இயக்குவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT