Published : 20 Jan 2023 05:26 PM
Last Updated : 20 Jan 2023 05:26 PM

“அன்றைக்கே 'மோனிஷா என் மோனலிசா' மூலம் பான் இந்தியா முயற்சி எடுத்தவன் நான்” - டி.ராஜேந்தர்

“மோனிஷா என் மோனலிசா’ படம் மூலம் அன்றைக்கே பான் இந்தியா படத்தை எடுக்க முயற்சித்தவன் நான்” என்று இயக்குநர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

நடிகரும், இயக்குநரும், இசையமைப்பாளருமான டி.ஆர்.ராஜேந்தர் ‘வந்தே வந்தே மாதரம்’ என்ற தனியிசைப் பாடலை தனது டி.ஆர்.ரெக்கார்ட்ஸ் மூலமாக தமிழ் மற்றும் இந்தியில் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ளார். இதில் அவரது பேரன் ஜேசனை பாடகராகவும் நடிகராகவும் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தப் பாடல் வெளியீட்டுவிழா குறித்தான பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.

இதில் கலந்து கொண்ட டி.ராஜேந்தர் பேசுகையில், “இன்று என்னுடைய வாழ்க்கையில் முக்கியமான நாள். உணர்ச்சிவசப்படக் கூடியவன் தான் நல்ல மனிதன். இயக்குநர், இசையமைப்பாளர் என பல படங்களுக்கு ப்ளாட்டின டிஸ்க் வாங்கி இருக்கிறேன். ட்யூன் பேங்க்காக ஆயிரக்கணக்கான பாடல்களை வைத்துள்ளேன். இந்த பாடல்களை வெளியிட டி.ஆர். ரெக்கார்ட்ஸ் ஆரம்பித்துள்ளேன்.

இதன் மூலம் பலருக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதில் முதல் பாடலாக 'வந்தே வந்தே மாதரம்' பாடலை என் தாய்மொழி தமிழ் மற்றும் இந்தியில் வெளியிட்டுள்ளேன். மறைந்த முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது 'மோனிஷா என் மோனலிசா' படத்தை இந்தியில் எடுத்து பான் இந்தியா அளவில் முயற்சி செய்தேன். அப்போது டிஜிட்டல் வசதிஇல்லை.

இப்போதும் பான் இந்தியா அளவில் படமெடுத்து என் பேரன் ஜேசனை அறிமுகப்படுத்த முயற்சி செய்தேன். ஆனால், இடையில் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. இப்போது இறைவன் அருளால் மீண்டும் வந்துள்ளேன். எனவே, மீண்டும் அந்த பான் இந்தியா படத்தைத் தொடங்க உள்ளேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x